×
Saravana Stores

ஆடி அமாவாசை.. சதுரகிரிக்கு கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு!!

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு இன்று முதல் 5 வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்குகிறது. இந்த விழா வருகிற 5ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி இன்று முதல் 5ம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சதுரகிரி மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மலையேறுவதில் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு. இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும், மலைப்பாதையில் அனுமதியின்றி கடைகள் அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆடி அமாவாசை.. சதுரகிரிக்கு கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Aadi Amavasai ,Chaturagiri temple ,Virudhunagar ,Chaturagiri ,Chaturagiri Sundara ,Chandana Mahalingam temple ,Western Ghats ,Vathirairipu ,Virudhunagar district ,
× RELATED ஐப்பசி மாத அமாவாசை சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம்