×

பரம்பிக்குளம் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் திருமூர்த்தி அணையை சென்றடையும் வகையில் காண்டூர் கால்வாயில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 20 தேதிக்குள் தூர் வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை கடைசியில் பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால், பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருமூர்த்தி அணையைச் சென்றடைந்தவுடன், 2-ஆம் மண்டல பாசனத்திற்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 95 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்.

தற்சமயம் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக, விரைவில் பரம்பிக்குளம் அணை நிரம்பும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு விடியா திமுக அரசு இதுவரை காண்டூர் கால்வாயில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், இப்பணிகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என்பதாலும், குறித்த காலத்தில் பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சுமார் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பரம்பிக்குளம் அணை அதன் முழு கொள்ளளவான 72 அடியை விரைவில் எட்டிய பிறகு, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வீணாக கேரள கடலில் கலக்கும் நிலை ஏற்படும்.

எனவே, போர்க்கால அடிப்படையில் காண்டூர் கால்வாயில் பராமரிப்புப் பணிகளை முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிடவும், குறித்த காலத்தில் 2-ஆம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பரம்பிக்குளம் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Parambikulam dam ,Thirumurthy dam ,Chennai ,Tamil Nadu government ,Contour Canal ,
× RELATED தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் யெச்சூரி: இ.பி.எஸ் இரங்கல்