பள்ளிபாளையம், ஆக.1: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் 244 பேர், முன்னெச்சரிக்கையாக அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடாவில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை 43வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் நீர், முழுமையாக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குமாரபாளையத்தில் இருகரைகளையும் தொட்டபடி, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் இரவு, ஆற்றின் தாழ்வான பகுதியில் உள்ள மணிமேகலை தெரு, அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் எச்சரித்து, வீடுகளில் இருந்து முகாம்களுக்கு அழைத்து வந்தனர். நடராஜா நகராட்சி திருமண மண்டபத்தில், 35 குடும்பத்திரை சேர்ந்த 89 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர ராஜேஸ்வரி திருமண மண்டப முகாமில், 115 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, உணவு உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் செய்துள்ளனர். வருவாய் கோட்டாச்சியர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள், இரவு முழுவதும் முகாமில் மக்களுடன் தங்கியிருந்து, தேவையான உதவிகளை செய்தனர். பள்ளிபாளையத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வரவில்லை. புதன்சந்தை பகுதியில், தாழ்வான பகுதியில் வசித்த மக்களை, அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வெளியேற்றி, செங்குந்தர் திருமண மண்டப முகாமில் தங்க வைத்துள்ளனர். இங்கு 15 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் கலெக்டர் உமா, பள்ளிபாளையம் ஜனதாநகர், ஆவத்திபாளையம், ஆவாரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். நிவாரண முகாம்களை பார்வையிட்ட கலெக்டர், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், நிவாரண முகாமில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், மழைக்கால தொற்று நோய்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பதை உறுதி செய்தார். தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். மோகனூர் : மோகனூர் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தீவிர பாதுகாப்பு பணியில் போலீசர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதயைடுத்து பாலப்பட்டி, குமாரபாளையம் மணப்பள்ளி, பேட்டப்பாளையம், மோகனூர், ஒருவந்தூர் உள்ளிட்ட காவிரி கரையோரம், பொதுமக்கள் ஆற்றுக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில் படிவாசல் பகுதியில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் கயிறு, பலூன் படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மோகனூர் இன்ஸ்பெக்டர் சவிதா, தாசில்தார் மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
The post காவிரியில் வெள்ளப்பெருக்கு நிவாரண முகாம்களில் 244 பேர் தங்க வைப்பு appeared first on Dinakaran.