- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- நீலகிரி மற்றும்
- தலைமைச் செயலாளர்
- சிவ்தாஸ் மீனா
- கலெக்டர்கள்
- மேற்கு
- மலைவழியைப்
- காவிரி
- துறை செயலாளர்கள்
- தின மலர்
சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் பல்துறை செயலாளர்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர் தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், மழைக்காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.
நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டறிந்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்ப வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையினையும் பயன்படுத்தி மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், தேவைப்படும் நேர்வில் அண்டை மாவட்டங்களிலிருந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு தீயணைப்பு படை வீரர்களை அனுப்பி வைக்கவும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும், சாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்திற்கு நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர்களை அனுப்பி வைக்கவும் தொடர்புடையத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுவது தொடர்பாக காவிரி ஆற்றுப்படுகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார். அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடுவது குறித்து பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை பண்டிகையின் போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்க வேண்டும். ஆபத்தான மற்றும் அபாயகரமான இடங்களில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும், வெள்ள நீர் செல்லும் ழூதாழ்வான பாலங்கள் மற்றும் தரைப்பாலங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிப்பிற்குள்ளான இடங்களுக்கு அருகில், மணல் மூட்டைகள். சாக்கு பைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள கழிவுகளை அகற்றி, வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஆற்றுப்படுகை மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு சென்று ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வருவாய் நிருவாக ஆணையர் பிரபாகர், வளர்ச்சி ஆணையர், செயலாளர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் செயலர் முருகானந்தம், நீர்வள ஆதாரத் துறை செயலாளர் மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர்அமுதா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் செந்தில்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆபாஷ் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; துறை செயலாளர்கள், கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.