×

ரூ100 கோடி நில அபகரிப்பு, கொலை மிரட்டல் வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர், இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவு


கரூர்: ரூ100 கோடி நில அபகரிப்பு, கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம், சிபிசிஐடி அலுவலகம், வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வாங்கல் போலீசாரால் ஜூலை 17ம்தேதி விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த 2 வழக்குகளிலும் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரது ஜாமீன் மனு விசாரணை கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் நடந்தது. இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஜாமீன் மனு விசாரணையும் கடந்த 29ம் தேதி நடைபெற்றது. 2வது நாளாக நேற்று முன்தினம் இரவு வரை விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார், விஜயபாஸ்கருக்கு மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி நள்ளிரவு 12.25 மணிக்கு உத்தரவிட்டார். ஜாமீன் தொகையாக ரூ25 ஆயிரம் செலுத்த வேண்டும். தினமும் வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு முறையும், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் பிரவீன், பிரித்விராஜ் ஆகியோருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3 பேரும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

The post ரூ100 கோடி நில அபகரிப்பு, கொலை மிரட்டல் வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர், இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Karur ,Karur court ,minister ,MR Vijayabaskar ,CBCID ,Wangal police station ,Vangal Kuppichipalayam ,Dinakaran ,
× RELATED ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது...