குமாரபுரம், ஆக.1: தக்கலை அருகே பிளம்பரை கழுத்தறுத்து கொன்றது ஏன் என கைதான நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தக்கலை அடுத்த திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மகேஷ் (37). பிளம்பர். இவரது மனைவி சோபி. சம்பவத்தன்று சோபி, சென்னை சென்று விட வீட்டில் தனியாக இருந்த மகேஷ், தனது நண்பர்களை அழைத்து மது விருந்து அளித்தார். மறுநாள் காலை கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மது விருந்துக்கு வந்த மகேசின் நண்பர்கள் திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த பெனிட் (27), திக்கணங்கோடு பொற்றை காட்டுவிளையை சேர்ந்த திரேன்ஸ் (23), மல்லன்விளையை சேர்ந்த பிபின் ஜேக்கப் (23) ஆகிய 3 பேர் சேர்ந்து மகேசை கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக பிபின் ஜேக்கப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் பெனிட், திரேன்ஸ் ஆகியோர் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தக்கலை போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பெனிட், திரேன்ஸ், பிபின் ஜேக்கப் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது 3 பேர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மகேஷ் அழைப்பின் பேரில் சம்பவத்தன்று பெனிட், திரேன்ஸ், பிபின் ஜேக்கப் ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்று மாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது பெனிட் தாயாரை, மகேஷ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் குடிபோதையில் மகேஷ் வாய்க்கு வந்தபடி வசைபாடினாராம். இதனால் 3 பேரும் சேர்ந்து மகேஷை தட்டிக்கேட்டனர். பின்னர் ஒருவழியாக தகராறு ஓய்ந்தது. இதையடுத்து சாப்பாடு எடுத்து வருகிறேன் எனக்கூறி மகேஷ் கீழே இறங்கி சென்றுள்ளார். ஆனால் சாப்பாடு கொண்டு வராமல் கையில் கத்தியுடன் மாடிக்கு வந்தார். பின்னர் கத்தியை எடுத்து 3 பேர் மீதும் வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் கத்தி படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெனிட், திரேன்ஸ், பிபின் ஜேக்கப் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனால் இருவரின் செல்போன்களும் மகேஷின் வீட்டுக்குள் இருந்தது. இதை எடுப்பதற்காக 3 பேரும் திரும்ப வந்தனர்.
செல்போன்களை எடுத்துவிட்டு மகேஷ் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக 3 பேரும் மாடிக்கு சென்றனர். அவர்களை கண்ட மகேஷ் மீண்டும் அறுவறுக்கத்தக்க வகையில் வசைபாடியுள்ளார். இதனால் கோபமடைந்த 3 பேரும் மகேஷின் வீட்டுக்குள் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு மீண்டும் மாடிக்கு வந்தனர். பின்னர் மகேஷை மிரட்டுவதற்காக கழுத்தை அறுத்துள்ளனர். ஆனால் கத்திக்குத்து ஆழமாக பட்டதால் மகேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இவ்வாறு போலீசாரிடம் 3 பேரும் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் போலீஸ் காவல் முடிந்த நிலையில் பெனிட், திரேன்ஸ், பிபின் ஜேக்கப் ஆகியோரை மீண்டும் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
The post தக்கலை அருகே குடிபோதையில் வசைபாடியதால் பிளம்பர் கழுத்தறுத்து கொலை கைதான நண்பர்கள் பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.