×

பொற்கோயில், கபர்தலா குருத்வாராவில் அடுத்தடுத்த நாளில் 2 பேர் அடித்துக் கொலை: தெய்வ நிந்தனை செய்ததாக குற்றச்சாட்டு; தீவிரமாக விசாரிக்க பஞ்சாப் முதல்வர் உத்தரவு

கபர்தலா: பஞ்சாப்பில் பொற்கோயில் மற்றும் கபதர்லா குருத்வாராவில் தெய்வ நிந்தனை செய்ததாக அடுத்தடுத்த நாளில் 2 பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சென்னி உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப்பில் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனித தலமாகும். இங்கு நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் சீக்கியர்கள் பலர் வழக்கம் போல் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். கோயிலின் மையத்தில் அமைந்துள்ள கருவறையில், சீக்கிய துறவி ஒருவர் புனித நூலான குரு கிராந்த் சாகிப்பை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் திடீரென கருவறை தடுப்பு கம்பியை தாண்டி குதித்து, அங்கிருந்த புனித வாளை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனடியாக அங்கிருந்த சிரோன்மணி குருத்வாரா பர்பன்தக் கமிட்டி (என்ஜிபிசி) பாதுகாப்பு குழுவினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். வாலிபரை கடுமையாக தாக்கி என்ஜிபிசி அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை போர்வை ஒன்றில் சிலர் கொண்டு வந்து வைத்தனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பஞ்சாப்பின் கபுர்தலாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் சீக்கிய மத கொடியை ஒருவர் இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அவரை பொதுமக்கள் அடங்கிய கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலயே இறந்துள்ளார். அடுத்தடுத்த நாளில் பஞ்சாப்பில் சீக்கிய மத நம்பிக்கையை களங்கப்படுத்தியதாக 2 பேர் அடித்துக் கொல்ல சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலானய்வு குழுவை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சென்னி அமைத்துள்ளார். மேலும் பொற்கோயிலுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டார். * இறந்தவர் மீது வழக்கு பதிவுஇந்த சம்பவம் குறித்து அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் சுக்செயின் சிங் கில் கூறுகையில், ‘‘பொற்கோயிலில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் மீது சட்டப்பிரிவு 295ஏ (மத நம்பிக்கையை இழிவுபடுத்துதல், புண்படுத்துதல்), சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம். முதலில் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,’’ என்றார். இந்த விவகாரத்தில் பொற்கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள என்ஜிபிசியும் விசாரணை குழுவை அமைத்துள்ளது.* அடையாளம் தெரியவில்லைபொற்கோயிலில் கும்பல் தாக்குதலால் பலியான வாலிபர் இறந்து 24 மணி நேரமான பிறகும் அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை என போலீசார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா கூறுகையில், ‘‘இறந்த வாலிபரிடம் செல்போன் இல்லை, பர்ஸ் இல்லை, அடையாள அட்டை இல்லை, ஆதார் அட்டை இல்லை எதுவும் இல்லை. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அவர் காலை 11 மணிக்கு பொற்கோயிலுக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. சில மணி நேரம் இங்கேயே இருந்துள்ளார். பின்னர், மாலையில் வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார். மாலை 6 மணிக்குப் பிறகு அவர் திடீரென கருவறைக்குள் தாண்டி குதித்துள்ளார் என்பது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது,’’ என்றார்.* சிபிஐ விசாரணை: பாஜ கோரிக்கைபஞ்சாப்பில் 5 முறை முதல்வராக இருந்தவரும், அகாலிதள கட்சி தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் அளித்த பேட்டியில், ‘‘இது ஒரு கொடூரமான முயற்சி. மிகுந்த அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுகிறது,’’ என்றார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது டிவிட்டரில், ‘தர்பார் சாகிப்பில் குரு கிராந்த் சாகிப்பை களங்கப்படுத்த நடந்த இந்த முயற்சி மோசமானது, கடுமையான கண்டனத்திற்கு உரியது. அத்துமீறிய அந்த நபரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசு கண்டறிய வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டுமென பாஜ கூறி உள்ளது….

The post பொற்கோயில், கபர்தலா குருத்வாராவில் அடுத்தடுத்த நாளில் 2 பேர் அடித்துக் கொலை: தெய்வ நிந்தனை செய்ததாக குற்றச்சாட்டு; தீவிரமாக விசாரிக்க பஞ்சாப் முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kabardala Gurudwara ,Golden Temple ,Punjab ,Chief Minister ,Kabardala ,Kabardala Gurdwara ,
× RELATED அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள...