×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட 8,883 மருத்துவ இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: மருத்துவகல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 8,883 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு  ஆண்டும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும், பி.டி.எஸ் படிப்புக்கு 1,925 இடங்கள் என மொத்தம் 8,883 மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 2021-22ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் உள்ள 8,883  மருத்துவப் படிப்புகளுக்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு நேற்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில்: தமிழக அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதைப்போன்று பி.டி.எஸ் படிப்புக்கு 1,925 இடங்கள் உள்ளன. இதற்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விண்ணப்பங்களை https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்படி விண்ணப்பங்களை ஜனவரி 7ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கல்லூரி கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிப்பது போன்ற விவரங்களுக்கு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேடுகளை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 044-28364822, 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி  இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற  முகவரியில் ஜனவரி 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது….

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட 8,883 மருத்துவ இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: மருத்துவகல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,Directorate of Medical Education ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி