- யுபிஎஸ்சி
- பூஜை
- புது தில்லி
- யூனியன் பணியாளர்கள் தேர்வு ஆணையம்
- ஐஏஎஸ்
- பூஜா கேத்கர்
- மகாராஷ்டிரா
- தின மலர்
புதுடெல்லி: சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சியை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் தேர்வெழுதவும் அவருக்கு தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் கடந்த 2022ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். அவர் புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சிக்காக பணியமர்த்தப்பட்ட போது தனி கேபின், அறை கேட்டதோடு தனது காரில் சட்டவிரோதமாக சுழல் விளக்கை பொருத்தி சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் வாஷிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் அவர் போலியான மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து ஐஏஎஸ் பதவியை பெற்றதாக புகார் எழுந்தது. இதனால் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் பயிற்சியை நிறுத்தி வைத்து மாநில அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பூஜா கேத்கரின் பின்னணி குறித்து யுபிஎஸ்சி விசாரணையை தொடங்கியது. அதில் பூஜா கேத்கர், சிவில் சர்வீஸ் தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதியது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, பூஜா கேத்கர் தனது பெயர் மட்டுமின்றி பெற்றோர் பெயரையும் மாற்றி அதிக முறை தேர்வெழுதியதும் அம்பலமானது. இதையடுத்து பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. வரும் காலத்தில் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளிலும் அவர் பங்கேற்க தடை விதித்துள்ளது.
The post சர்ச்சையில் சிக்கிய பூஜாவின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது யுபிஎஸ்சி: வரும் காலங்களில் தேர்வெழுதவும் தடை appeared first on Dinakaran.