×

முதல்வர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பதிவு முன்னாள் டிஜிபி நட்ராஜ் வருத்தம் தெரிவித்தார்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் டிஜிபி நட்ராஜ், வாட்ஸ்அப் குழு ஒன்றில் இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும் இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பொய்யான செய்தியை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து, திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீலா அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீசார், மதகலவரத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து நட்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நடராஜ் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை கொண்டுள்ளதாகவும் தன் மீதான வழக்கு எதிர்பார்க்காத ஒன்றும் அந்த வாட்ஸ்அப் தகவலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதை தான் அங்கீகரிக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இந்த பிரமாணப் பத்திரத்தை அதே வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு அதன் நகலை காவல்துறைக்கு வழங்குமாறு நீதிபதியிடம் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருத்தம் தெரிவித்துள்ளதால் 24 மணி நேரத்திற்குள் பிரமாணப்பத்திரத்தை வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு உடனடியாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

The post முதல்வர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பதிவு முன்னாள் டிஜிபி நட்ராஜ் வருத்தம் தெரிவித்தார்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Natraj ,WhatsApp ,Chief Minister ,High Court ,CHENNAI ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் மீது நடிகர் நிவின் பாலி புகார்