×

கோயில் இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரம் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், அருகில் அமைந்துள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தி மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியானது கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாத நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த இடம் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவிகள் மூலம் இதுவரை 1,69,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. ரூ.6,076 கோடி மதிப்பீலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேகுளி, பெருமாள் சுவாமி மற்றும் பட்டாளம்மன், நாகமங்கலம், நீலகிரி அனுமந்தராய சுவாமி ஆகிய கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் சில தனியார் நிறுவனங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் கழிவுகளை கொட்டுவது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் கோயில்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி நானும், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய், சுரங்கத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் உறுதியான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமை பொறியாளர் பெரியசாமி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post கோயில் இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரம் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Shekhar Babu ,Arulmiku Ekambaranathar Matriculation Higher Secondary School ,Kanchipuram ,Killipakkam, Chennai ,
× RELATED பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க...