×
Saravana Stores

ஜார்க்கண்டில் அதிகாலையில் விபத்து ஹவுரா-மும்பை ரயில் தடம் புரண்டது: 2 பேர் பலி 20 பேர் காயம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து நாக்பூர் வழியாக மும்பை நோக்கி 22 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் செராய்கேலா கர்சவான் மற்றும் மேற்கு சிங்க்பம் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பாராபாம்பூ பகுதியில் அதிகாலை 3.45 மணி அளவில் ரயில் வந்த போது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் 16 பயணிகள் பெட்டிகள் மற்றும் மின்விநியோகத்திற்கான ஒரு பெட்டி, பேண்ட்ரி கார் பெட்டி என 18 பெட்டிகள் தடம்புரண்டன. தகவல் அறிந்ததும், ரயில்வே போலீசார் உட்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 2 பயணிகள் பலியானதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் மேற்கு சிங்க்பம் சப் கலெக்டர் குல்தீப் சவுத்ரி உறுதி செய்துள்ளார். தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஓம் பிரகாஷ் சரண் கூறுகையில், ‘‘பயணிகள் ரயில் தடம் புரண்ட இடத்திற்கு அருகிலேயே சரக்கு ரயிலும் தடம்புரண்டது.

இந்த 2 விபத்துகளும் ஒரே நேரத்தில் நடந்ததா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை’’ என்றார். அதே சமயம், சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஹவுரா-மும்பை பயணிகள் ரயில் மோதியதாக மேற்கு சிங்கபம் சப் கலெக்டர் சவுத்ரி கூறி உள்ளார்.  விபத்து குறித்து ரயில்வே கமிஷனர், பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. விபத்தை தொடர்ந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உதவவும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காயமடைந்த பயணிகள் பாராபாம்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில மணி நேரங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததாகவும், மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபகாலமாக ரயில் விபத்துக்கள் தொடர்கதையாகி உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் பெரிய அளவிலான 7 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் பயணிகள் பலர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனால் ரயில் பயணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளனர்.

* ஆட்சியா செய்கிறீர்கள்? மம்தா பானர்ஜி காட்டம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மற்றொரு கோரமான ரயில் விபத்து! அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். சீரியசாகவே கேட்கிறேன், இதுதான் அரசு நிர்வாகம் செய்யும் லட்சணமா? ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்தால் மரணங்கள், காயங்கள் நடக்கின்றன. இன்னும் எத்தனை காலம் இதை பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஒன்றிய அரசின் அலட்சியத்திற்கு முடிவே இல்லையா?’’ என காட்டமாக விமர்சித்துள்ளார்.

* ரயில் அமைச்சர் பெயில் அமைச்சர்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ‘பெயில் அமைச்சர்’ அதாவது தோல்வி அடைந்த அமைச்சர் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் மட்டுமே 3 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 17 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆனால் பொது வெளியில் தன்னை விளம்பரபடுத்திக் கொள்ளும் பெயில் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறார்’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவண் கேரா, ‘‘மோடியின் புதிய இந்தியாவில் வாரந்தோறும் ஒரு ரயில் விபத்து என்றாகிவிட்டது’’ என சமீபத்தில் நடந்த விபத்துகளை பட்டியலிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொய் கதைகளை உருவாக்குவதை விட்டுவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி கூறி உள்ளது.

The post ஜார்க்கண்டில் அதிகாலையில் விபத்து ஹவுரா-மும்பை ரயில் தடம் புரண்டது: 2 பேர் பலி 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Howra ,Jharkhand ,Ranchi ,Howrah, West Bengal ,Nagpur ,Mumbai ,Hawra ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் தேர்தல்… கட்சி...