போடி, ஜூலை 31: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாகவே சீசன் துவங்கி விட்டது. ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே சாரல் மற்றும் மிதமான மழை பெய்வதும், பகலில் வெயில் கொளுத்துவதும், இரவில் குளிர்ந்த காற்று வீசியும் வருகிறது.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக போடிமெட்டு, குரங்கணி, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், முதுவாக்குடி, கொழுக்குமலை, கொட்டகுடி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சிறு சிறு அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது,
தற்போது முட்டம் குரங்கணிக்கு இடையே உள்ள சாம்பலாற்று மெகா தடுப்பணையில் மழை வெள்ளம் அதிகரித்திருப்பதால் நீர் பெருக்கெடுத்து மறுகால் பாய்ந்து அங்கிருந்து புறப்படும் கொட்டக்குடியாற்றில் மழை நீர் தற்போது கடந்து வேகமெடுத்துள்ளது. இதனால் போடி முந்தல் சாலையில் உள்ள மூக்கறை பிள்ளையார் மெகா தடுப்பணை நிரம்பியுள்ளது. ஏற்கனவே தடுப்பணையில் தண்ணீர் நிறைந்திருந்ததால், மழைநீர் அப்படியே வெளியேறி சில மடைகளின் வழியாக சென்று பல்வேறு கிராமங்களில் இருக்கும் கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு செல்ல ஆரம்பித்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும், நேரடி பாசனத்திற்கும் விரைவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு அதிகரித்திருப்பதாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.