- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- அருள்மிகு எகம்பரநாதர் மெட்ரிகுலேஷன் செகண்டரி பள்ளி
- அப்புக்கம்
- காஞ்சிபுரம்
- சேகர் பாபு
சென்னை: கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கம், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ 11.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், அருகில் அமைந்துள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தி மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருவதோடு அதில் 22,247 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியானது திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாத நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த இடம் திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதல்வர் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியினை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்திட உத்தரவிட்டார்கள். அதன்படி 2021 ஜீன் மாதம் முதல் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,153 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் 32 வகுப்பறை கட்டடங்கள், ஆசிரியர்கள் அறை மற்றும் 5 ஆய்வகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த இடமானது 7.5 ஏக்கர் ஆகும். இதில் பள்ளியானது 2.8 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. மீதமுள்ள 4.7 ஏக்கர் பரப்பிலான அந்நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அதனை சமன்படுத்தி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அறம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோயில்கள் சார்பில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதில் ஒன்றான கொளத்தூர், கபாலீசுவரர் கல்லூரியில் தற்போது 748 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தாண்டு 141 மாணவர்கள் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளனர். திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டு 4 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வழக்கின் காரணமாக மற்ற கல்லூரிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையை பெற்று, ஏற்கனவே அறிவித்த கல்லூரிகளை தொடங்குவதோடு மட்டுமல்லாமல் புதிய கல்லூரிகளையும் தொடங்குவதற்குண்டான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இவற்றை அளவீடு செய்து பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவிகள் மூலம் இதுவரை 1,69,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. ரூ.6,076 கோடி மதிப்பீலான திருக்கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக 38 மாவட்டங்களுக்கும் வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவையர்கள் மாற்று பணியில் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். மீட்கப்பட்ட சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கும், குத்தகை காலம் முடிவுற்ற இடங்களுக்கு மறுகுத்தகை வழங்குவதற்கும் மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி, பெருமாள் சுவாமி கோயில் மற்றும் பட்டாளம்மன் கோயில், நாகமங்கலம், நீலகிரி அனுமந்தராய சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் சில தனியார் நிறுவனங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் கழிவுகளை கொட்டுவது குறித்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் கோயில்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி நானும், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய், சுரங்கத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் உறுதியான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டிருக்கிறது என்பது நாடறிந்த உண்மையாகும். அக்கூட்டணியில் இருக்கின்ற கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்தே அதற்கு சாட்சியாகும். இருப்பினும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்கு போராடி வருகிறார்கள். முதல்வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை நடத்தி கொண்டிருக்கின்றார். எத்தகைய சூழலிலும் தனது நிர்வாகத் திறமையினால் அனைத்தையும் சமாளித்து நமது முதல்வர் வெற்றி காண்பார். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமை பொறியாளர் பெரியசாமி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரம்; முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.