×

4 வருடம் 200 நாடுகளின் தேசிய கீதங்கள்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு நபர் அதிகபட்சம் 8 அல்லது பத்து மொழி, அந்த மொழிகளில் ஒரு 500 பாடல்களை நினைவில் வைத்துக் கொள்வதே பெரிய விஷயம். இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் வந்த பிறகு நாம் இரண்டு எண்களை தவிர மற்ற எண்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அந்த இரண்டு எண்களை நினைவில் வைத்துக் கொள்வதே இப்போது பெரிய விஷயமாக உள் ளது. ஆனால் 14 வயதே நிரம்பிய சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த சுபிக்‌ஷா, 200 நாடுகளின் தேசிய கீதங்களை கற்றுக்கொண்டு, அதை பிழை இல்லாமல் பாடுகிறார். தேசியகீதம் என்பது ஒரு நாட்டின் அடையாளம். அதனை தவறாக பாடினால் அந்த நாட்டை அவமதிப்பதற்கு இணையானது. அதனை பிழையில்லாமல் பாடி உலக சாதனைக்காக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.

‘‘நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிக்கு செல்லாமல் ஹோம் ஸ்கூலிங் தான் செய்றேன். பொதுவா குழந்தைப் பருவத்தில் ஓவியம் வரைவது, பாடுவது, நடனம் என ஒவ்வொருவருக்கும் ஒரு துறை மேல் ஆர்வம் இருக்கும். நான் பள்ளிக்கு செல்லும் காலத்தில் எனக்கும் இது போன்ற விஷயத்தில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. கொரோனா சமயத்தில் வீட்டில் இருந்த போது, டிவியில் பாட்டு கேட்பது என்னுடைய பொழுதுபோக்காக மாறியது.

அப்பாவிடம் நான் எனக்கு பாட்டு பாட ஆசையா இருக்குனு சொன்னேன். அவர் என்னை சுப்ரபாதம் கத்துக்க சொன்னார். சுப்ரபாதம் முழுக்க முழுக்க சமஸ்கிருத ெமாழி. அதன் உச்சரிப்பை மிகவும் கவனமா சொல்லணும். ஆனால் நான் இதை பார்க்காமல் படிக்க கத்துக்கிட்டா என்னுடைய நியாபகத் திறன் மற்றும் உச்சரிப்பு எல்லாம் நன்றாக இருக்கும்னுதான் அப்பா அதை கற்றுக் கொள்ள சொன்னார். நானும் 6 மாதப் பயிற்சி எடுத்தேன்.

முழுமையா பாடவும் கத்துக்கிட்டேன். அந்த சமயத்தில்தான் ஒரு முறை டிவியில் கனடா நாட்டின் தேசிய கீதம் கேட்டேன். அது ரொம்பவே வித்தியாசமாவும், நல்லாவும் இருந்தது. அதைப் பற்றி அப்பாவிடம் சொன்ன போது, அவரும் அதை பாட கத்துக் கொடுத்தார். அந்த சமயத்தில் தோன்றிய எண்ணம்தான் தேசிய கீதங்களை பயில வேண்டும் என்பது. அதன் ஆரம்பகட்டமாக நானும் அப்பாவும் எத்தனை நாடுகள் உள்ளன, அவற்றின் தேசிய கீதங்கள் என்ன என்று தேட ஆரம்பிச்சோம். மொத்தம் 210க்கும் மேற்பட்ட நாடுகள். அதில் 195தான் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள். மற்றவை எல்லாம் சின்னச் சின்ன நாடுகள் மற்றும் தீவுகள் என்று இருந்தது. அந்த சிறிய நாடு மற்றும் தீவுகளின் பெயர்கள் எல்லாம் வித்தியாசமா இருந்தது.

ஒரு நாட்டின் பெயரே வித்தியாசமா இருக்கும் போது, அதன் தேசிய கீதங்கள் எப்படி இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து டவுன்லோடு செய்தேன். ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதங்களை கேட்கும் போதும் வித்தியாசமாக இருந்தது. அதில் என்ன விசேஷம்னா ஒரு சில நாட்டிற்கு 2 மொழிகளில் தேசிய கீத பாடல்கள் உள்ளன. உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்காவில் 5 மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட தேசிய கீதம் உள்ளது. அதன் ரிதங்கள் ஒரே மாதிரி இருந்தாலும், வரிகள் வேறுபட்டு இருக்கு. மொழிகளும் வேறு வரிகளும் வேறு என்பதால், ஒவ்வொன்றும் கேட்கும் போது வித்தியாசமா இருக்கும்’’ என்ற சுபிக்‌ஷா, தேசிய கீதங்கள் கற்ற வழிமுறைகளை விளக்குகிறார்.

‘‘முதலில் எத்தனை நாடுகள், அதன் மொழிகள் என்ன என்று குறிப்பெடுத்தேன். அடுத்து அந்த நாட்டின் தேசிய கீதத்தை கூகுளில் தேடி ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து மனப்பாடம் செய்வேன். வார்த்தையின் உச்சரிப்புகளை சரியாக பார்த்து படிப்பேன். பின் அதனை பார்க்காமல் உச்சரிப்பேன். அப்படி ஒவ்வொரு தேசிய கீதங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். ஒன்று, இரண்டு என துவங்கி, தற்போது 200க்கும் மேலான தேசிய கீதங்களை மனப்பாடமாக படிச்சிருக்கேன்.

பார்க்காமலும் பாடுவேன். வெளியே சுற்றுலா போகும் போது அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அவர்கள் எந்த நாடு என்று கேட்டு, அவர்களிடம் பாடி காண்பிப்பேன். அவர்கள் தப்பு இருந்து அதை குறிப்பிட்டு ெசால்வாங்க. அப்படி என்னுடைய உச்சரிப்பு மற்றும் வார்த்தைகளை திருத்திக் கொண்டேன். இப்படித்தான் நான் ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதங்களையும் பயிற்சி எடுத்தேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் பாடுவது ஒரு நாட்டின் அடையாளமாக கருதப்படும் தேசிய கீதம். அதில் ஒரு சின்ன பிழை செய்தால் கூட நாம் அந்த நாட்டை அவமதிப்பதற்கு சமம். அதனாலே ரொம்பவும் கவனமாக இதை கத்துக்கிட்டு இருக்கேன்.

இதற்காக நான் தனிப்பட்ட பயிற்சியாளர் எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. அப்பாவின் உதவியுடன் முழுக்க முழுக்க ஆன்லைனில்தான் கத்துக்கிட்டேன். ஒன்று, இரண்டு அல்லது பத்து மொழிகளை பயில வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியாளர் வைத்துக் கொள்ளலாம். இங்கு மொத்தம் 200க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கு. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட ஆசிரியர் வைப்பது ரொம்ப கஷ்டம்.

இதற்கு முழுமையாக பயிற்சி எடுப்பதால் நான் ஹோம் டியூஷன் முறையில் பள்ளிப் பாடங்களை பயின்று வருகிறேன். அதற்கு என்னுடைய ஆசிரியர்கள் முழு ஆதரவு கொடுத்தாங்க. சாதனை செய்ய தடை இல்லை. அதே சமயம் படிப்பையும் விடக்கூடாதுன்னு அவங்க எனக்கு அட்வைஸ் செய்தாங்க. தற்போது நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். வீட்டிலிருந்து படிக்க கஷ்டமா இல்லையான்னு பலர் கேட்டு இருக்காங்க. நான் தேர்வு செய்திருக்கும் துறையில் சாதிக்கணும். ஒரு பக்கம் படிப்பு மறுபக்கம் பயிற்சி என நான் ரொம்பவே பிசியா இருக்கேன்’’ என்றவர் தேசிய கீதப் பாடல்களில் உள்ள ஒற்றுமைகளை விளக்கினார்.

‘‘நான் ஏற்கனவே சொன்னது போல் தென் ஆப்பிரிக்காவில் ஐந்து மொழிகள். அதனால் அங்கு ஐந்து தேசிய கீதங்கள். இவை ஐந்திற்கும் உள்ள ஒற்றுமை இதன் பாடல் வரிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கும். ஆனால் அதன் பின்னணி இசை ஒரே மாதிரியாக இருக்கும். கிரீஸ் மற்றும் சைப்ரஸ் இரண்டு நாட்டிற்கும் ஒரே தேசிய கீதம்தான். இதில் கிரீஸ் நாட்டு தேசிய கீதம் ஒரு மணி நேரம் இருக்கும். அவ்வளவு நேரம் பாட முடியாது என்பதால் அதன் வரிகளை குறைத்து பாடி வருகின்றனர்.

இந்தியா மற்றும் வங்கதேச நாட்டின் தேசிய கீதங்கள் இரண்டையும் எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். தேசிய கீதங்களை படிக்க ஆரம்பித்த பிறகு பல துறையை சார்ந்த பிரபலங்களை சந்தித்து அவர்கள் முன் என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முன் என் திறமையை வெளிப்படுத்திய போது, அவர் எனக்கு ‘உலக குயில்’ என்னும் பட்டத்தை வழங்கினார். என்னுடைய கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றின்னுதான் இதை ெசால்லணும்’’ என்றவர், வருகிற 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 77 நாடுகளின் தேசிய கீதத்தை பாடி நம் நாட்டை பெருமைப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post 4 வருடம் 200 நாடுகளின் தேசிய கீதங்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஃபுட் போட்டோகிராபிக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கு!