×
Saravana Stores

சேலம் தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படு வருவதாக மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இந்நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து சில விவரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.

இந்த ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடைப் பண்ணை வளாகம், மீன்வள செயல்முறை வளாகம், முதுநிலைக் கல்வி/ பட்ட மேற்படிப்பு வளாகம், விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகம், ஆராய்ச்சி வளாகம், தொழில் உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு வளாகம், இறைச்சி உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் வளாகம், பசுந்தீவன ஆராய்ச்சி மண்டலம், பொதுமக்கள் கலந்துரையாடும் பகுதி ஆகிய 9 வளாகங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை எண். 187, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்துறை (காப2), நாள்- 30.12.2019 -ன் வழியாக ஆணையிடப்பட்டது.

இவ்வாராய்ச்சி நிலையத்திற்கென 110/22 கிவோ துணை மின் நிலையம் ரூ.28.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலமாகவும் ஆராய்ச்சி நிலையத்தின் தேவைக்கான குடிநீர் வழங்க சிறப்பு குடிநீர் வழங்கல் திட்டம் ரூ.262.16 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. ஆராய்ச்சி நிலையத்தின் கட்டமைப்பு வசதிகள் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையத்தில் மேற்காள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், திட்டமிடப்பட்ட 9 வளாகங்களின் கட்டுமானம் மற்றும் மின் இணைப்பு பணிகள் ஆகியவற்றில் 2021-ல் கழக ஆட்சி பொறுப்பேற்ற போது 50 சதவிகித பணிகள் கூட முடிவடையாத நிலையே இருந்தது. உலகத் தரத்தில் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடம் அதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்த ஆராய்ச்சி முதலில் நடைபெற்றிருக்க வேண்டும். சரியான திட்டமிடல் இருந்திருந்தால் எதிர்கட்சித்தலைவர் குறிப்பிட்ட காலதாமதத்தை தவிர்த்திருக்கலாம்.

அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சரியான திட்டமிடுதல் இல்லாமல், அவசர கதியில், மக்களின் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தைத் தொடங்கியுள்ளார்கள். கால்நடைப் பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். தினசரி 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் ஒரு நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்தது எந்த வகையான திட்டமிடல் எனத் தெரியவில்லை.

எனினும், கடந்த 07.05.2021 ல் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் கழக ஆட்சி அமைந்த பிறகு இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து கால்நடை வளர்ப்போர் உண்மையான பயன் பெறும் வகையில் கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1. இந்நிலையத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்தும் பொருட்டு மாண்புமிகு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், அரசு தலைமைச் செயலாளரைத் துணைத் தலைவராகவும் கொண்ட திட்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கல்லூரி முதல்வர் நிலையில் இயக்குநர் பதவி நிர்ணயம் செய்யப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.
3. மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்று வந்த உயர் மின்அழுத்த கம்பிகள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
4. டான்சி நிறுவனம் மூலம் அறையணிகள் கொள்முதல் முடிக்கப்பட்டு அவற்றை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5. இந்நிலையத்திற்கு. முதற்கட்டமாக தேவைப்படும் பணியிடங்களை தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை போன்ற அரசு துறைகள் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று, 2023ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், மக்களவை தேர்தல் ஆகியவை காரணமாக ஜனவரி 2024லில் முடிக்கப்படவேண்டிய பணிகள் சிறிது தாமதமாக முடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் முதலமைச்சரின் சீரிய தலைமையிலான கழக அரசு அத்திட்டத்திற்கு ஆதரவினை அளித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சரியான திட்டமிடல் இல்லாமலும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமலும் கடந்த ஆட்சியில் பல குழப்பங்களுடன் ஏற்படுத்தப்படவிருந்த கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து குழப்பங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு அனைவரும் பயன்பெரும் பேருந்து நிலையமாக உலகத்தரத்தில் மாற்றியமைத்தது போல கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையமும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.

The post சேலம் தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Integrated Research Center for Veterinary and Animal Sciences ,Salem Thalaivasal ,Minister ,Anitha Radhakrishnan ,Salem ,Fisheries ,Fishermen Welfare ,Animal ,Anitha R. ,Integrated Research Center for Veterinary and Animal Science ,Thalivasal ,Salem district ,Radhakrishnan… ,Integrated Research Center for Veterinary and Zoology ,Dinakaran ,
× RELATED மோடி இந்தியாவின் பிரதமரா? குஜராத்தின்...