திருவாரூர், ஜூலை 30: திருவாரூர் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உலாமாக்கள் அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும் சமயப்பணி ஆற்றுவதற்கு புதிய இரு சக்கரவாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம்- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எதுகுறைவோ,அத்தொகை வழங்கிடஅரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி,திருவாரூர் மாவட்டத்தில் பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இருசக்கரவாகனம் புதியதொழில்நுட்பத்துடன் இஞ்சின் 125 சி.சி சக்திக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
1.1.2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களின் மனுதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்கவேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல், 18லிருந்து 45 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கரவாகனம் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். பதிவுசெய்யப்பட்ட வக்ஃப் நிறுவனத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் பேஷ் இமாம், அரபிஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, குடும்பஅட்டை, வயதுசான்று, வருமான சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்றசான்று, சாதிச்சான்று,
ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சிக்கான சான்றிதழ், வங்கிகணக்குஎண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி குறியீட்டுடன் கூடியவங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், விலைப்பட்டியல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறார் என்ற சான்று பெற்று மாவட்டவக்ஃப் கண்காணிப்பாளர் மேலொப்பதுடன் சமர்ப்பிக்கவேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக வேலைநாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளுடன் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு மானியத்தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்
The post வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த உலாமாக்கள் அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.