புதுடெல்லி: மக்களவையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி அரசு வரி பயங்கரவாதத்தை ஏவி நடுத்தர மக்களின் முதுகில் குத்தி விட்டது’ என ஆவேசமாக கூறினார். மேலும், பாஜவின் சக்கரவியூகத்தை இந்தியா கூட்டணி உடைத்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், சாதிவாரி கணக்கெடுப்பையும் உறுதி செய்யும் என அனல்தெறிக்க கூறினார். மக்களவையில் 2024-25ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. வார விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியதும் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்தது.
இதில், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது: நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. பாஜ கட்சியில் ஒருவர் மட்டுமே பிரதமர் கனவு காண முடியும் என்கிற நிலை இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் பிரதமராக விரும்பினால், நடக்குமா? இதுதான் பெரிய பிரச்னை. இந்த அச்சம்தான் நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த அச்சத்தால்தான் பாஜவில் உள்ள எனது நண்பர்களும், அமைச்சர்களும் பயப்படுகிறார்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியிலும் கூட அச்சம் நிறைந்துள்ளது.
மகாபாரத இதிகாசத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யு எனும் இளம் வீரன் 6 பேர் கொண்ட சக்கரவியூகத்தால் கொல்லப்பட்டான். சக்கரவியூகம் என்பது வன்முறையும் பயமும் நிரம்பியது. ஒரு போர் வீரனை சிக்க வைக்க பல அடுக்கு ராணுவ அமைப்பை கொண்ட தாமரை வடிவ போர் உத்தி தான் சக்கரவியூகம். தாமரை போன்று இருப்பதால் சக்கரவியூகத்தை பத்மவியூகம் என்றும் சொல்வதுண்டு.
இந்த 21ம் நூற்றாண்டிலும் இதே போன்ற சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அதை பிரதமர் மோடி தனது நெஞ்சில் தாங்கி உள்ளார். அன்று சக்கரவியூகத்தை கொண்டு அபிமன்யுவை என்ன செய்தார்களோ, அதையே இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் செய்கிறார்கள். இந்த சக்கரவியூகத்தின் மையத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட 6 பேர் உள்ளனர். இந்தியாவை சூழ்ந்திருக்கும் இந்த சக்கரவியூகத்திற்கு பின்னால் 3 சக்திகள் உள்ளன.
முதலாவது, 2 தொழிலதிபர்களே முழு இந்திய செல்வத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள அனுமதிப்பது, இரண்டாவது நாட்டின் கல்வி நிறுவனங்கள், ஏஜென்சிகள், சிபிஐ, அலமாக்கத்துறை, வருமானவரித்துறை, மூன்றாவது அரசு அதிகாரிகள். இந்த மூன்றும் சக்கரவியூகத்தின் இதயமாக இருந்து நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பட்ஜெட் சக்கரவியூகத்தின் சக்தியை பலவீனப்படுத்தும் என எதிர்பார்த்தேன். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் நாட்டின் சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என நினைத்தேன். ஆனால் உண்மையில் இது ஏகபோக வணிகத்தின் கட்டமைப்பையும், ஜனநாயகத்தையும், ராணுவத்தையும் அழிக்கும் அரசியல் ஏகபோகத்தின் கட்டமைப்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டதாக இருப்பதை பார்க்கிறேன்.
பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிக்கான இன்டர்ன்ஷிப் திட்டம் பற்றி நிதி அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் முன்னணி 500 நிறுவனங்களில் இன்டர்ஷிப் வழங்கப்படும் என கூறியிருக்கிறார். இதில் காமெடி என்னவென்றால், நீங்கள் கூறும் 500 முன்னணி நிறுவனங்களுக்கும் நாட்டின் 99 சதவீத இளைஞர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சக்கரவியூகத்தின் மூலம் முதலில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை காலி செய்து அவர்களின் காலை உடைத்தீர்கள், இப்போது இன்டர்ன்ஷிப் எனக் கூறி கட்டு போடுகிறீர்கள்.
வேலையில்லா திண்டாட்டமும், வினாத்தாள் கசிவும் வெறும் பிரமை என்கிற மாயை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது. இன்றைக்கு வினாத்தாள் கசிவுதான் இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்னை என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி பட்ஜெட்டில் கொஞ்சம் கூட பேசப்படவில்லை. அதே சமயம், கல்வித்துறைக்கான பட்ஜெட்டை குறைத்துள்ளீர்கள். நீங்கள் உங்களை தேசியவாதிகள் என்று கூறிக் கொள்கிறீர்கள். ஆனால் ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்திற்கு பணம் கொடுக்க மறுக்கிறீர்கள்.
தேசத்திற்காக சேவை செய்ய வரும் இளைஞர்களை அக்னி வீரர்கள் என்னும் சக்கரவியூகத்தில் சிக்க வைக்கிறீர்கள். இந்த பட்ஜெட்டுக்கு முன்பு வரையிலும் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களாக இருந்திருக்கலாம். ஏனென்றால், கொரோனா தொற்றின் போது, பிரதமர் மோடி சொன்னார் என்பதற்காக டார்ச் அடித்து, தட்டு, டம்ளர்களை அடித்து நடுத்தர மக்கள் தங்களின் ஆதரவை காட்டினார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில், வரி பயங்கரவாதத்தை ஏவி அதே நடுத்தர வர்க்கத்தினரின் முதுகில் குத்தி இருக்கிறீர்கள்.
இன்டெக்சேஷன் ரத்து, நீண்டகால மூலதன ஆதாய வரி உயர்வு போன்ற கடுமையான ஆயுதங்களை அவர்கள் மீது ஏவியிருக்கிறீர்கள். இதனால் நடுத்தர வர்க்கத்தினரும் இனி உங்களை விட்டுவிட்டு, எங்கள் பக்கம் வரப் போகிறார்கள். இது இந்தியா கூட்டணிக்கு ஒருவகையில் நன்மைதான். இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அபிமன்யு என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர்கள் அபிமன்யுக்கள் அல்ல. அர்ஜூனர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் சக்கரவியூகத்தை உடைக்கக் கூடியவர்கள். இந்தியா கூட்டணி தனது முதல் அடியை எடுத்து வைத்து பிரதமர் மோடியின் நம்பிக்கையை சீர்குலைத்து விட்டது.
அடுத்ததாக, இந்தியாவின் தன்மை வன்முறையோ சக்கரவியூகமோ அல்ல என்பதை பத்மவியூகக்காரர்களுக்கு புரிய வைக்கப்படும். நீங்கள் சக்கரவியூகங்களை உருவாக்குபவர்கள். நாங்கள் அவற்றை உடைப்பவர்கள். சிவபெருமானின் திருமண ஊர்வலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எந்த மதத்தினரும் இடம் பெறலாம். ஆனால் பத்மவியூகத்தில் 6 பேருக்கு மட்டுமே இடம். இங்கு நடப்பது சிவபெருமானின் இந்தியாவுக்கும், சக்கரவியூகத்திற்கும் இடையேயான யுத்தம். சக்கரவியூகத்தால் சிவனின் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. உங்களை இந்து என சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு இந்து மதம் புரியவில்லை.
உங்களின் சக்கரவியூகத்தை உடைத்தெறிவோம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதையும் உறுதி செய்வோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். ராகுல் பேசியபோது ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு ஆகியோர் குறுக்கிட்டனர். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ராகுல்,’ நாங்கள் பேச கையை உயர்த்தும் போது பிரதமரும், அமைச்சர்களும் எங்கள் கோரிக்கைக்கு உடன்பட்டால், அவர்கள் குறுக்கிட கேட்கும் ஒவ்வொரு முறையும் நாங்களும் அனுமதிப்போம்’ என்றார்.
* அதானி, அம்பானிக்கு ஏ1, ஏ2 என புதுப்பெயர்
பாஜ அரசின் சக்கரவியூகம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அதில் பிரதமர் மோடி, அமித்ஷா, தொழிலதிபர்கள் அதானி, அம்பானி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகிய 6 பேர் இருப்பதாக கூறினார். அவையில் இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிட சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். ஓம்பிர்லா கூறும்போது,’நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். நீங்கள் முதலில் அனைத்து நடைமுறை விதிகளையும் இன்னும் ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என்று சபாநாயகர் கூறினார். இதனால் அடுத்ததாக அதானி, அம்பானியை ஏ1, ஏ2 என ராகுல் காந்தி குறிப்பிட்ட போது எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
* அல்வா கிண்டுவதில் கூட எஸ்சி, எஸ்டிக்கள் இல்லை முகத்தை மூடி சிரித்த நிதி அமைச்சர்
ராகுல் காந்தி பேசுகையில், ‘‘பாஜ அரசின் முழு பட்ஜெட் வெறும் நாட்டின் 3 சதவீத பேருக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. பட்ஜெட் தயாரிப்பு திட்டமிடலில் புறக்கணிக்கப்பட்தோடு, அல்வா கிண்டும் நிகழ்வில் கூட எஸ்சி, எஸ்டி, ஓபிசியினர் யாரும் இல்லை’’ என கூறியபடி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய படத்தை அவையில் காட்டினார் ராகுல். அப்போது அவையில் இருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முகத்தை மூடியபடி சிரித்துக் கொண்டிருந்தார்.
* ராகுல்காந்தி அரசியல் சட்டத்திற்கு மேலானவர் அல்ல; அமைச்சர்கள்
மக்களவையில் நேற்று ராகுல்காந்தி பேசிய பேச்சு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,’ ராகுல்காந்திக்கு அரசியலமைப்பைப் பின்பற்றும் எண்ணம் இல்லை. நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கும் போது விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சபாநாயகர் ஓம் பிர்லாவின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியது கண்டிக்கத்தக்கது.
அதுவும் சபாநாயகரை ராகுல் தாக்கிய விதத்தை நான் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பெரிய பொறுப்பு. ஆனால் சபாநாயகரை குறிவைத்து அவையில் ராகுல் பேசியது துரதிர்ஷ்டவசமானது. நீங்கள் தயவுசெய்து விதிகளைப் படியுங்கள். சபை விதிகளின்படி செயல்படுகிறது, சபாநாயகரே அவையின் பாதுகாவலர். மேலும் விவாதத்தில் பட்ஜெட்டைத் தவிர மற்ற அனைத்தையும் பற்றி பேசினார். எனவே விதிகளின்படிதான் ராகுல்காந்தி பேச வேண்டும் என்று சபாநாயகர் மூலம் மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியது இருந்தது. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இல்லாதபோது அது வேறு விஷயம்.ஆனால் இப்போது அவர் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில்,’ ராகுல் காந்தி ஒருமுறை தனது சொந்தக் கட்சியின் அரசால் பிறப்பிக்கப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தை கிழித்தெறிந்தார். அரசியலமைப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் எண்ணம் அவருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசியல் சாசனப் பதவியை வகித்தாலும், சபையில் ராகுல்காந்தியின் நடத்தை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியது’என்றார்.
The post வரி பயங்கரவாதத்தை ஏவி நடுத்தர மக்கள் முதுகில் குத்திய மோடி அரசு: பாஜவின் சக்கரவியூகத்தை எதிர்க்கட்சிகள் தகர்க்கும்; மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.