* 528 யானைகள் உயிரிழப்பு
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கிர்தி வர்தன் சிங் அளித்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 528 யானைகள் உயிரிழந்துள்ளது. 50 யானைகள் வேட்டையாடப்பட்டன மற்றும் 13 யானைகள் விஷத்தினால் உயிரிழந்துள்ளது. ஒடிசாவில் மின்சாரம் தாக்கி 71 யானைகள் உயிரிழந்துள்ளன. அசாமில் 55, கர்நாடகாவில் 52, தமிழ்நாட்டில் 49, சட்டீஸ்கரில் 32. ஜார்க்கண்டில் 30, கேரளாவில் 20 யானைகள் உயிரிழந்துள்ளன. ரயிலில் சிக்கி அசாமில் 22 யானைகளும், ஒடிசாவில் 16 யானைகளும் இறந்துள்ளன என்றார்.
* யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் 57 இந்திய தலங்கள்
மக்களவையில் ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்காக இந்தியாவில் சுமார் 57 சொத்துக்களின் பெயர்கள் தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அசாமில் உள்ள அஹோம் வம்சத்தின் மொய்டாம்ஸ் ஜூலை 26ம் தேதி யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்கில் இருந்து பெறப்பட்ட முதல் கலாச்சார சொத்தாகும் என்றார்.
* பாம்பு கடித்து ஆண்டுக்கு 50,000 பேர் பலி
மக்களவையில் பேசிய பாஜ எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி, நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 50ஆயிரம் உயிரிழக்கின்றனர். இது உலகிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்றார்.
* தேர்வில் தோல்வியால் 1.2% மாணவர்கள் தற்கொலை
மக்களவையில் ஒன்றிய கல்வி துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தர் பேசுகையில், மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்காக ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. விபத்து இறப்புக்கள், தற்கொலைகள் என்சிஆர்பி தரவுகளின்படி மொத்த தற்கொலை சம்பவங்களில் 1.2 சதவீதம் மட்டுமே தேர்வில் தோல்வியுடன் தொடர்புடையது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்காக மனோதர்பன் முயற்சியை தொடங்கியுள்ளது என்றார்.
* பழைய யுபிஎஸ்சி தேர்வு முறை தேவை
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய சமாஜ்வாடி எம்பி ராம்கோபால், ஒன்றிய அரசானது பழைய முறையில் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்த வேண்டும். இது ஒரு தீவிர பிரச்னை. கல்வியின் நோக்கமானது ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகும். முந்தைய தேர்வு முறையானது நாட்டில் பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளை உருவாக்கி பெருமை சேர்த்தது. நான்கு விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் இப்போதைய வினாத்தாள் வடிவம் மோசடி மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கிறது என்றார்.
The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.