- பாஜக நிர்வாகி போலீஸ்
- எஸ்ஐ
- சிவகங்கை
- செல்வகுமார்
- வேளாங்குளம்
- பாஜக கூட்டுறவு பிரிவு
- சட்டரசன்கோட்
- இளையான்குடி சாலை
- மர்மா
- பாஜக
சிவகங்கை: சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(49). செங்கல் சூளை நடத்தி வந்த இவர், பாஜ கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராகவும் இருந்தார். கடந்த 27ம் தேதி இரவு, இவர் டூவீலரில் இளையான்குடி சாலையில் சாத்தரசன்கோட்டை அருகே சென்றபோது மர்ம கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்த நிலையில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் சிவகங்கை அருகே மேலப்பிடாவூரை சேர்ந்த மருதுபாண்டி(20), சாத்தரசன்கோட்டையை சேர்ந்த அருண்குமார் (எ) தொத்தல்(20), வைரம்பட்டி வசந்தகுமார்(25), புதுப்பட்டி சட்டீஸ்வரன்(21), சிவகங்கை எம்ஜிஆர் காலனியை சேர்ந்த விஷால்(20) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
கைதான வசந்தகுமார், கொலை செய்ய பயன்படுத்திய வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை புதுப்பட்டி கண்மாய் அருகே உள்ள கோயில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அவற்றை எடுப்பதற்காக நேற்று மாலை வசந்தகுமாரை, புதுப்பட்டி கோயில் பகுதிக்கு சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்ஐ பிரதாப் மற்றும் 5 போலீசார் சென்றனர். அங்கு சென்றதும் ஒரு வாளை எடுத்த வசந்தகுமார், திடீரென எஸ்ஐ பிரதாப்பின் இடது கை தோள்பட்டையில் வெட்டி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வசந்தகுமாரின் இடது கால் மணிக்கட்டுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் அவர் கீழே விழுந்தார். பின்னர் எஸ்ஐ பிரதாப் மற்றும் வசந்தகுமாரை, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வசந்தகுமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ் வந்து எஸ்ஐ பிரதாப்பிடம் விசாரித்தார். கொலைக்கான காரணம் என்ன?: கடந்த 2019ல் மேலப்பிடாவூரைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு செல்வக்குமார் உதவி செய்துள்ளார். இதனால் புவனேஸ்வரன் தரப்பினருக்கும், செல்வக்குமாருக்கும் பிரச்னை இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக செல்வக்குமாரை கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
The post பாஜ நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது எஸ்ஐயை வெட்டி தப்ப முயன்ற வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.
