- நீலகிரி
- கொடைக்கானல்
- அமைச்சர் தங்கம்
- தென்திசை
- சென்னை
- சென்னை அண்ணா ரயில்வே வாரியம்
- அமைச்சர்
- தங்கம்தென்னராசு
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம்
- ராஜேஷ் லகானி
- விசு மகாஜன்
சென்னை: சென்னை அண்ணா சாலைமின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், மின் பகிர்மானம் இயக்குநர் இந்திராணி, அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கனமழை பெய்து வருதால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், அனைத்து இடங்களிலும் பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.
மேலும், கனமழையின் காரணமாக ஒரு சில இடங்களில் ஏதேனும் மின் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, காரணங்களை உடனடியாக கண்டறிந்து, உடனுக்குடன் சரி செய்து, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்து, சீரான மின் விநியோகம் வழங்கிடவும், மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக, இந்த மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தில், கனமழையால் இதுவரை பாதிப்படைந்த 230 உயரழுத்த மின் கம்பங்களில் 200 மின் கம்பங்கள், 466 தாழ்வழுத்த மின் கம்பங்களில் 302 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. பாதிப்படைந்த 25 மின் மாற்றிகளில் 16 மின் மாற்றிகளில் சரி செய்யப்பட்டும், 9 மின் மாற்றிகளுக்கு பின்னூட்டம் வழியாக சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 250 பேர் கொண்ட குழுவினர் தற்போது களத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு உட்பட்ட வடகவுஞ்சி, மேல்பள்ளம் மற்றும் சவரிக்காடு ஆகிய இடங்களில் கன மழையின் காரணமாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் விரைவாக சரி செய்யப்பட்டு இப்பகுதிகளுக்கு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
* தமிழகம் முழுவதும்…
தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காக, கடந்த 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் இன்றைய நிலவரப்படி 8,813 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. சாய்ந்த நிலையில் இருந்த 8,040 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. புதிதாக 3,905 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 45,525 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. 10,605 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர்த்து 182 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைபேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
The post நீலகிரி மற்றும் கொடைக்கானலில் தொடர் கனமழை தங்கு தடையின்றி சீரான மின்விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு appeared first on Dinakaran.