- கப்பூர் டோல்கேட்
- மதுரை
- அமைச்சர்
- பி. மூர்த்தி
- கெப்பூர் டோல்கேட்
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
- கெப்பூர்
- திருமங்கலம், மதுரை மாவட்டம்
- தின மலர்
மதுரை: கப்பலூர் டோல்கேட்டை சுற்றி 7 கி.மீ சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் டோல்கேட் அமைந்துள்ளது. விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதால், இதனை அகற்றி விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள மேலக்கோட்டை விலக்கு பகுதிக்கு மாற்ற கடந்த 12 ஆண்டுகளாக திருமங்கலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி முதல் உள்ளூர் சரக்கு வாகனங்கள் அனைத்தும் 50 சதவீதம் கட்டணம் செலுத்தியே கப்பலூர் டோல்கேட்டை கடக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இது திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 10ம் தேதி டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் அனைத்துச் சங்கங்கள், பொதுமக்கள் திரண்டு டோல்கேட்டில் 9 மணி நேர முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, தற்காலிகமாக பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் இன்று பந்த் நடைபெறும் என போராட்டக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கப்பலூர் டோல்கேட் விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா, எஸ்பி அரவிந்தன், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மற்றும் டோல்கேட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களை அனுமதிப்பதில் கடந்த 2020ல் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டது.
உள்ளூரில் வசிப்பவர்களின் ஆதார் அட்டை விபரம் அடிப்படையில் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கான தனி பாதை அமைத்து வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கு, டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் சிலர் நிலையான நிரந்தரமான முடிவு வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டு நடைமுறைப்படி உள்ளூர் வாகனங்கள் டோல்கேட் கட்டணமின்றி அனுமதியளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கூட்டம் முடிந்தது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி ஒருதரப்பினர், தாங்கள் திட்டமிட்டபடி திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றனர்.
The post 2020ம் ஆண்டைப் போலவே கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை: முத்தரப்பு கூட்டத்தில் தகவல் appeared first on Dinakaran.