ஈரோடு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற திட்டத்திற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வீடு கட்ட தொடங்கிய பிறகும்கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டி: கீழ்பவானியில் ஆகஸ்ட் 15ம் தேதி திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படும். காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஈரோடு மாவட்டத்தில் 41 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். 2500 சதுர அடி வரையிலான கட்டிடம் கட்டுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
திட்டம் தொடங்கப்பட்ட முதல்நாளிலேயே ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. உடனுக்குடன் அனுமதி வழங்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வீடு கட்ட தொடங்கிய பிறகுகூட விண்ணப்பித்து அனுமதி பெறலாம். அதில் ஒரே நிபந்தனை உரிய விதிமுறைகளின்படி கட்டப்பட வேண்டும் என்பதுதான். ஆன்லைன் திட்டத்திற்கு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறுவது தவறு. முன்பு பல தலைப்புகளில் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஒரே தலைப்பின் கீழ் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் கூடுதலாக தெரிகிறது. ஆனாலும் பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post ஆன்லைன் திட்டத்துக்கு அமோக வரவேற்பு வீடு கட்ட தொடங்கிய பிறகும்கூட விண்ணப்பித்து அனுமதி பெறலாம்: அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.