- கடுக்கரை
- மயிலாறு
- குமாரி
- வனத்துறை?: பொது
- பூதப்பாண்டி
- கடுக்கரை காடு
- குமாரி மாவட்டம்
- மேற்குத்தொடர்ச்சி
- தின மலர்
பூதப்பாண்டி, ஜூலை 30: கடுக்கரை வன பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால், வன பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். குமரி மாவட்டம் வனங்கள் நிறைந்த பகுதி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் இங்குள்ள காடுகளில் அடர்த்தி அதிகமாக இருக்கும். மொத்தம் 14 வகையான வனங்கள் இங்கு உள்ளன. இரு பருவ மழை பொழியும் மாவட்டம் ஆகும். வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், இங்கு வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி வரும் நிலையில், வன விலங்குகள் வாழ்விடத்தை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
பல்வேறு சமயங்களில் மலையோர குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பதுடன், வன விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மனித உயிர்கள் பலியாகியும் உள்ளன.
குறிப்பாக யானைகள் தாக்கி உயிர் பலிகள் அதிகமாக உள்ளது. இங்குள்ள வனத்தில் யானைகள் மட்டுமின்றி புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மிளா, கருமந்தி குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உள்ளன. வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கீரிப்பாறை, காளிகேசம், மயிலாறு போன்ற மலை கிராமங்களையொட்டி சமீப காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதில் மயிலாறு பகுதியில் 6 காட்டு யானைகள் கூட்டம், கடுக்கரை பகுதியில் ஒரு ஒற்றை யானை நடமாட்டத்தை வனத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதையடுத்து 2 குழுக்களாக பிரிந்து வனத்துறை பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோதையாறு அருகே உள்ள மயிலாறு குடியிருப்பு பகுதியின் அருகே 6 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளன. இதை பொதுமக்களும் பார்த்துள்ளனர். வனத்துறையினரும் இதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். இது தவிர கடுக்கரை கிராமத்தையொட்டி வனப்பகுதியில் ஒரு ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கீரிப்பாறை, காளிகேசம், தெள்ளாந்தி, கடுக்கரை சுற்று வட்டார மலை கிராம மக்கள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அதிகாரி ராஜேந்திரன் அறிவிப்பு கொடுத்துள்ளார். ஒற்றை யானையாக வலம் வரும் போது அதன் ஆவேசம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ரப்பர் தோட்டங்களுக்கு பால் வெட்டும் தொழிலுக்கு செல்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வனத்துறையினர் கடந்த சில தினங்களாக இரண்டு குழுக்களாக பிரிந்து வன பகுதியின் கிராமத்தையொட்டி யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். யானைகள் கிராமத்திற்குள் வந்து விடாமல் இருக்க யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சிகள் நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கடுக்கரை, மயிலாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம்; குமரி மலையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.