×

திருவண்ணாமலையில் 50 ஆயிரம் லிட்டர் திறனுள்ள பால் பொட்டலங்கள் பேக்கிங் செய்யும் வசதி: காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, ஜூலை 30: திருவண்ணாமலையில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட பால் பாக்கெட் பேக்கிங் செய்யும் பண்ணையை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பால் வளத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கானொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமையிடத்தில் ₹2.84 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கையாளும் திறன் கொண்ட பால் பொட்டலமிடும் பண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதையொட்டி, பால் கூட்டுறவு ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதுவரை, வேலூரில் ஆனின் நிறுவனத்தில் இருந்து பால் பொட்டலங்கள் கொண்டுவரப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இங்குள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் புதியதாக பேக்கிங் யூனிட் தொடங்கப்பட்டுள்ளதால் பால் பாக்கெட்டுகள் இங்கேயே உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் அமரவாணி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவண்ணாமலையில் 50 ஆயிரம் லிட்டர் திறனுள்ள பால் பொட்டலங்கள் பேக்கிங் செய்யும் வசதி: காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,CM ,Thiruvannamalai ,Chief Minister ,M.K.Stalin ,Department of Rural Development ,Department of Dairy Resources ,Chennai ,
× RELATED தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை...