×

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலம் 3 லட்சம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர்: விண்ணை பிளந்த அரோகரா முழுக்கம்; திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முருகப்பெருமானுக்கு பட்டு வஸ்திரம்

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். காவடி ஓசைகளும், அரோகர முழக்கங்களும் முருகன் மலைக்கோயிலை அதிரச் செய்ததுடன் விண்ணைப் பிளந்தன. முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முக்கிய நிகழ்வான ஆடிக்கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு மரகதமாலை, பச்சைக்கல் முத்து, தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைஅடுத்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்து மலைப்பாதை, சரவணப் பொய்கை திருக்குளம் வழியாகவும், நல்லாங்குளம் அருகே படிக்கட்டுகள் வழியாகவும் பக்தர்கள் பக்திப் பாடல்கள் இசைத்துக் கொண்டு மலைக்கோயிலை வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து காலை, இரவு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோயில் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உடைகள் அணிந்து வந்த பக்தர்கள், காவடிகளின் ஓசை, அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக திருமலை திருப்பதி செயல் அலுவலர் ஷியாமலா ராவ் தலைமையில் தேவஸ்தானம் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முருகப்பேருமானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர். அதேபோல் பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் சீர் வரிசை வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோயில் மற்றும் கோயில் நுழைவு வாயில், சரவணப்பொய்கை திருக்குளம் ஆகிய பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் லோகநாதன் உபயமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான மூன்று டன் மலர்கள் காணிக்கையாக வழங்கினார். விழாவையொட்டி சரவணப் பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோயிலிருந்து மேளதாளங்கள் முழங்க படிகள் வழியாக தெப்பத்தில் எழுந்தருளினார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பிரபுசங்கர், திருத்தணி எஸ்.சந்திரன் எல்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பேருந்து நிலையம் அருகில் சண்முகர் திருமண மண்டபத்தில் பல்துறை பணி விளக்க கண்காட்சியை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் திறந்து வைத்தார். ஆடி கிருத்திகையை ஒட்டி திருத்தணி முருகனை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை குடும்பத்துடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

The post திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலம் 3 லட்சம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர்: விண்ணை பிளந்த அரோகரா முழுக்கம்; திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முருகப்பெருமானுக்கு பட்டு வஸ்திரம் appeared first on Dinakaran.

Tags : Aadikrittikai festival Kolakalam ,Tiruthani ,Kavadi ,Lord Muruga ,Tirupati Devasthanam ,CHENNAI ,Kavadis ,Aadikrittikai ,Tiruthani Murugan Temple ,Murugan hill ,Subramania ,Lord ,Muruga… ,Thiruthani Aadikrittikai festival Kolagalam ,
× RELATED திருத்தணி அருகே சென்னை – திருப்பதி...