சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சென்னை மாநகராட்சி மற்றும் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் முழுமையாக அகற்றி, மாலைக்குள் திடக்கழிவுகளை கையாண்டு குப்பைகளே இல்லாத நிலை உருவாக்க சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். புதிய மற்றும் மாற்றம் செய்யப்பட்ட அனைத்து எல்இடி தெருவிளக்குகளும் 100% எரிவதை உறுதி செய்ய வேண்டும். மழைக் காலத்திற்கு முன்னர் நீர்நிலைகள், ஏரி, குளம் போன்றவைகளை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைத்து, மழைக்காலத்தினை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். திட்டப் பணிகளில் தேர்வு செய்த சாலைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.
பாதாள சாக்கடை,குடிநீர் திட்ட பணிகள் முடிவுற்றதும் குழிகளை நிரப்பி மிகுதியான மண்ணை அகற்றி போக்குவரத்திற்கு ஏதுவாக சாலையினை சீர்செய்திட வேண்டும். பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தை வளாகங்கள் காலை, மாலை என இருநேரமும் சுத்தம் செய்யப்பட வேண்டும். தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தக்க நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் தற்போது நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.
எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் துறை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.