ஈரோடு, ஜூலை 30: தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மா நில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2023-2024ன் கீழ் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக தென்னை பரப்பு விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, ஈரோடு வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் 10 ஹெக்டேர் நிலப்பரப்பிலான தென்னை விவசாயிகளுக்கு முழு மானியத் தொகையில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.
இதில், ஒரு விவசாயிக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.65 மதிப்பிலான 162 தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படும். மேலும், ரூ. 1,500 மதிப்பிலான இயற்கை இடுபொருள்களும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தில் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் எண், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள ஈரோடு வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை வேலை நாள்களில் நேரில் அணுகலாம் என ஈரோடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வினோதினி தெரிவித்துள்ளார்.
The post தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள் appeared first on Dinakaran.