பொன்னேரி:பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(25). இவர் முதுகலை பட்டதாரியான மோகன் தமது பெரியப்பா சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மூலதாங்கல் கிராமத்தில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவிற்காக அலங்கார விளக்குகளும், வண்ணக் கொடி கம்பங்களும் நடப்பட்டிருந்தன. தீமிதி திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை அலங்கார விளக்குகளையும், கொடிக்கம்பத்தையும் அகற்றும் பணியில் மோகன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இரும்பு கொடி கம்பத்தை அகற்றும் பொழுது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் மோகன் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.