மும்பை: மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட திருத்திய வாக்குப்பதிவு விவரங்களில் கூடுதலாக சேர்ந்த சுமார் 4.65 கோடி வாக்குகள் தான், பாஜ கூட்டணி 79 இடங்களில் வெற்றி பெற உதவியிருக்க வேண்டும் என, மும்பையைச் சேர்ந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. இதில், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், மும்பை வடமேற்கு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட ரவீந்திர வைகர் தான். வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளர் அமோல் கீர்த்திகரை தோற்கடித்தார்.
கடைசிச் சுற்று வரை முன்னணி நிலவரம் மாறி மாறி வந்த நிலையில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இவர் பெற்ற வெற்றி சந்தேகத்துக்குள்ளானது. எனவே, இவரது வெற்றியை செல்லாதது என அறிவிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அமோல் கீர்த்திகர் நேற்று வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ‘வோட் ஃபார் டெமாக்ரசி’ என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு புள்ளி விவரம், பாஜ வெற்றியின் மீது சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் டீஸ்டா செடால்வட், டால்பி டிசவுசா ஆகியோர் இந்த அமைப்பில் உள்ளனர். முன்னாள் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ஆர்வலர் டாக்டர் பியாரே லால் கார்க் ஆகியோர் அறிக்கையை தயாரித்துள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.
ஒவ்வொரு கட்டத்திலும், தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு சதவீதத்தை இரவு 8 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், அதன் பிறகு திருத்தப்பட்ட பட்டியலும் தேர்தல் ஆணையத்தால் வெளியானது. தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்ட அறிக்கையிலும், பின்னர் இரண்டாவதாக வெளியிட்ட அறிக்கையிலும் வாக்கு சதவீதம் கணிசமான அளவுக்கு மாறுபட்டது. இதனால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. காரணம், வாக்குப்பதிவு சதவீத வித்தியாசம் 3.2 சதவீதம் முதல் 6.32 சதவீதம் வரை காணப்பட்டது. சராசரியாக ஒட்டுமொத்த அளவில் 4.72 சதவீதம்வாக்குப்பதிவு அதிகரித்திருந்தது. இது தேர்தல் ஆணைய புள்ளி விவரத்தில் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இது அமைந்தது.
இரண்டாவதாக, இந்த வாக்குப்பதிவு வித்தியாசமானது, பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 மாநிலங்களில் 79 இடங்களில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 10 மாநிலங்களில் 18 தொகுதிகளில் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் கூறுவது போல, வாக்குகள் மக்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, இந்த ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மக்களவை தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், அந்த சந்தேகத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் இந்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதிகபட்சம் 12.54 சதவீதம்
வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்ட பட்டியலிலும் இரண்டாவதாக வெளியிட்ட பட்டியலிலும் வாக்குப்பதிவு வித்தியாசம் 3.2 சதவீதம் முதல் 6.32 சதவீதம் வரை காணப்பட்டது. அதிகபட்சமாக ஆந்திராவில் 12.54 சதவீதம், ஒடிசாவில் 12.48 சதவீதம் என இருந்தது. இதற்கு முன்பு எந்த ஒரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் இந்த அளவுக்கு முரண்பாடு இல்லை.
The post பதிவான வாக்குகள் திடீரென அதிகமான மர்மம்; பாஜ, கூட்டணி கட்சிகள் 79 இடங்களில் வெற்றி பெற உதவிய 4.65 கோடி வாக்குகள்?.. ஆய்வறிக்கையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.