×

அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று; ‘ஜன் சுராஜ்’ அமைப்பை கட்சியாக்கும் பிரசாந்த் கிஷோர்: 2025 பீகார் தேர்தலில் போட்டி

பாட்னா: மகாத்மா காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபம் 2ம் தேதி ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். பீகாரை சேர்ந்த தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர், அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், தேர்தல் உத்தி வகுப்புப் பணியைக் கைவிட்டார். பின்னர் 2022ம் ஆண்டு ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் அமைப்பை தொடங்கி பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அதற்காக பீகார் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று பாட்னாவில் ‘ஜன் சுராஜ்’ பரப்புரையின் மாநில அளவிலான பயிலரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோா் பேசுகையில், ‘ஏற்கெனவே நான் கூறியதுபோல வருகிற அக்டோபர் 2ம் தேதி (மகாத்மா காந்தி பிறந்த நாள்) ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளேன். அடுத்த ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஜன் சுராஜ்’ கட்சி போட்டியிடும். கட்சியின் தலைவர் யார் போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்றார். நேற்று நடந்த பயிலரங்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ‘பாரத ரத்னா’ விருது பெற்றவருமான கர்பூரி தாக்கூரின் பேத்தி ஜக்ரிதி தாக்கூர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று; ‘ஜன் சுராஜ்’ அமைப்பை கட்சியாக்கும் பிரசாந்த் கிஷோர்: 2025 பீகார் தேர்தலில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Gandhi Jayanthi ,Prashant Kishore ,Jan Suraj ,2025 Bihar elections ,Patna ,Good ,the People ,Mahatma Gandhi ,Bihar ,Prashant ,Gandhi Jayanti ,Bihar elections ,Dinakaran ,
× RELATED தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் கட்சியில் அனைவருக்கும் இடம்