×

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு: பிரச்னையை தீர்த்து வைத்த அதிகாரிகள்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு சந்தை வளாகம் 295 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு பழங்கள், பூக்கள், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் மார்க்கெட்டுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூ மார்க்கெட் அருகில் பசுமைப் பூங்காஅமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்தது. பல்வேறு சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியை சிஎம்டிஏ கோரியுள்ளது. பூங்காவில் அடர்வனம், பசுமை புல்வெளி, பருவகாலத்துக்கு ஏற்றவகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. திறந்த வெளிப் பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில், பூங்கா வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகளுக்கு பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென்று பூங்கா கட்டுவதற்கு சுவர் எழுப்பியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வியாபாரிகள் சென்று, ‘’பார்க்கிங் ஏரியாவில் சுவர் எப்படி கட்டலாம்’ என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு அங்காடி நிர்வாக அதிகாரிகள் வந்த சுவர் எழுப்புவதை நிறுத்தினர். இதன்பின்னர் வியாபாரிகள், சி.எம்.டி.ஏ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், ‘’வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் வியாபாரிகளுக்கு தெரியாமல் எப்படி சுவர் எழுப்பலாம்’ என்று தெரிவித்திருந்தனர். ‘’உங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எந்த ஒரு வேலையும் நடக்காது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் பூங்கா அமைக்கப்படாது’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

 

The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு: பிரச்னையை தீர்த்து வைத்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Chennai Koyambedu ,Chennai Metropolitan Development Corporation ,Koyambedu Flower Market ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 20 டன்...