டெல்லி: வெளிநாடு செல்வோர் அனைவருக்கும் வருமான வரி அனுமதிச் சான்றிதழ் கட்டாயமில்லை என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு வருமான வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்தார். அதன்படி வெளிநாடு செல்வோர் வரி பாக்கி எதுவும் இல்லை என்று அதிகாரிகளிடம் அனுமதி சான்றிதழ் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் இணைய தளத்தில் பரவிய நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, வருமான வரி சட்டத்தின்படி ஒவ்வொரு நபரும் வரி அனுமதி சான்றிதழை பெறுவது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது. கருப்பு பணம் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் வருமான வரி உள்ளிட்ட வரிப்பாக்கி உள்ளவர்கள், வருமான வரி சட்டத்தின் கீழ் விசாரணைக்கு இருப்பது அவசியம் என்பதால் அவர்கள் வெளிநாடு செல்லும் போது வரி அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயம் என விளக்கம் அளித்துள்ளது.
அவ்வாறு வரி அனுமதி சான்றிதழ் பெறுபவர்கள் தங்களுக்கு எந்த வரி பாக்கியம் இல்லை என்று வருமான வரித்துறையிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அதற்கு வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அல்லது வருமான வரித்துறையின் தலைமை ஆணையரின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு வருமான வரி அல்லது செல்வ வரி உள்ளிட்டவற்றின் கீழ் எந்த நிலுவையும் இல்லை என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வெளிநாடு செல்வோருக்கு வருமான வரி அனுமதிச் சான்றிதழ் கட்டாயமில்லை: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.