×

தமிழ்நாடு முழுவதும் சுகப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுகப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைத்திட வல்லுநர்களின் விரிவான கருத்துக்களை செயல்படுத்துவதற்கான பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் கூறுகையில், கேரளாவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 18 என்ற அளவில் உள்ளது. அவர்களை விட மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே நோக்கம். மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு உடற்பயிற்சி யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் பலனளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுகப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். நாட்டிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பர படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பெண்களுக்கு சமீப காலமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளது. சுகப்பிரசவம் என்பது குறைந்து வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக பெண்கள் அதிக அளவில் வேலை பார்த்தனர். அதனால்தான் அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கு பணிசுமை குறைந்துவிட்டது. இதனால்தான் சிசேரியன் பிரசவம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுகப்பிரசவங்கள் என்பது அதிகரிக்க வேண்டும். மேலும் இந்தியாவிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.

 

The post தமிழ்நாடு முழுவதும் சுகப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Minister of People's Welfare ,Rayapetta, Chennai ,Tamil Nadu People's Welfare Department ,
× RELATED தமிழ்நாட்டில் நடப்பாண்டு இதுவரை 11,538...