*மின்வாரிய அதிகாரி, போலீசார் பேச்சுவார்த்தை
ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை தெற்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமரம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த தைல மரத்தோப்புகளுக்கு அருகில் சில தனியார் விவசாயிகள் அவர்களது வயல்வெளியில் பயன்படுத்துவதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து அதற்கு தமிழக அரசின் இலவச மின்சாரத்தை பெற்றுள்ளனர்.
இலவச மின்சாரத்திற்கு செல்லும் மின்பாதை தைல மர தோப்பு வழியாக செல்வதால் தைல மரங்கள் மின் கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. நேற்று உட்கோட்டை தெற்கு வருவாய் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் ராமதாஸ் (70), பிச்சமுத்து மகன் ராஜசேகர் (50),சாமிநாதன் மகன் ஜெயபிரகாஷ் (48),தட்சிணாமூர்த்தி மகன்கள் பாலச்சந்தர் (44), பாலாஜி (38) பாலமுருகன் (40), சிங்காரவேலு மனைவி கலா (40) கண்ணுத்துரை மகன் தேவதாஸ் (50),சாரங்கபாணி மகன் வெங்கடாசலம் (45) உள்ளிட்ட சில விவசாயிகளுக்கு சொந்தமான தைல மர தோப்பு வழியாக செல்லும் மின் பாதையில் மின் கம்பிகள் உரசி தீ விபத்து ஏற்பட்டது. இதே பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பு தீ பற்றி எரிந்த நிலையில் மின்பாதைக்கு அருகில் உள்ள தைல மரங்களை மின்சார வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினார்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் நேற்று மின் பாதையில் உள்ள மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று காற்றில் உரசி அதில் ஏற்பட்ட தீப்பொறி தைல மர தோப்பில் விழுந்து பற்றி எரிந்தது.
மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியாமல் தைல மரக்காடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம் ஆகிவிட்டது. இதில் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் செய்வதறியாது அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தைலமரத்தோப்பு உள்ள பகுதி வழியாக மின் பாதை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மின் பாதையை மாற்று பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் தொடர்ந்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் வயலில் செல்லும் மின் பாதையை மாற்றுப் பாதையில் அமைத்து தர வேண்டுமென கூறி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் வந்து மின்பாதையை மாற்றி அமைத்து தர உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுஜித், லோகநாதன், மின்சார வாரிய இளநிலை பொறியாளர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ் (தெ) மாலதி (வ) புல்லட் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் விவசாயயிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் பாதையை மாற்றி அமைக்க தாசில்தாருக்கு மனு அளிக்க கேட்டுக்கொண்டார். தாசில்தாருக்கு தாங்கள் வயல்களின் வழியாக செல்லும் மின் பாதையை பொதுப் பாதையில் மாற்றி அமைக்க மனு அளித்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலந்து சென்றனர்.
The post ஜெயங்கொண்டத்தில் வயல்வழியாக செல்லும் மின் பாதையை மாற்றி அமைக்ககோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.