×

தர்மபுரி அருகே அஜ்ஜிப்பட்டியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், ஜருகு கிராமம் அஜ்ஜிபட்டி அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சன்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே ஜருகு அஜ்ஜிப்பட்டி காட்டுப்பகுதியில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில், வரலாற்று துறை மாணவர்கள் சக்திவேல், அஜய்குமார், இளந்திரையன், கணேஷ், விஜய், கல்லூரி உதவி பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் களப்பயணம் மேற்கொண்டனர்.

இதில், அஜ்ஜிப்பட்டியை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்றால், ஏறக்குறைய 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நூற்றுக்கணக்கான பெருங்கற்கால ஈமச்சின்னங்களும், மனிதர்கள் வாழ்வதற்கான தடயங்களும் கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து வரலாற்று பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சந்திரசேகர் கூறியதாவது:
கல்வட்டம் என்பது பெருங்கற்கால மனிதர்களின், ஈமக் குழிகளாகும்.

கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இன்றிலிருந்து சுமார் 3000 முதல் 3500 ஆண்டுகள் வரை முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்கள், தங்கள் இறப்பிற்கு பிறகு மறுவாழ்வு உண்டு என்ற மறுபிறவிகோட்பாட்டில் நம்பிக்கை இருந்ததால், ஈமக்குழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். இறந்த பின்பு பெரிய பள்ளம் தோண்டி, நான்கு பக்கமும் சுமார் 6 முதல் 8 அடி நீளம் உள்ள பெரிய பலகை கற்களை கொண்டு சுவஸ்திக் சின்னம் போல, ஒன்று இன்னொருடன் தாக்கி பிடிப்பது போல ஒரு சவகுழியினை தயார் செய்வர்.

அதன் மேல், மூடு கல் எனப்படும் ஒரு பெரிய கல்லை கொண்டு மூடுவர்கள். அதனுடைய எடை சுமார் 5 முதல் 10 டன் வரை இருக்கும். இதன் வடக்கு அல்லது கிழக்கு புறம் ஒரு துவாரம் அமைக்கப்படும். இது வருடம் ஒருமுறை ஆவிக்கு உணவு அளிப்பதற்காகவும், ஆவி வெளியே வந்து செல்வதற்குமான வழி என்று வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். மேலும் இக்குழியை சுற்றி நான்கு புறமும் சில இடங்களில் பானைகளை வைத்து அவற்றில் தண்ணீரை வைப்பது வழக்கம். இவற்றின் மேல் மண் கொண்டு மூடி சுற்றிலும் வட்டமாக, வட்ட வட்ட கற்களை கொண்டு ஒரு ஈமக்குழி அமைப்பர். இது கல்வட்டம் என்று அழைக்கப்படும்.

இதுவே பிற்காலத்தில் டால்மெண்ட் எனப்படும் கல் பதுக்கைகளாக மாறி, கோயில்களாக மாறியது எனலாம். தமிழர்களின் இறந்தோரை வணங்கும் பழக்கம் இங்கிருந்துதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. இக்கல்வட்டம் இப்பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில், நூற்றுக்கணக்காக காணப்படுகிறது. உள்ளே சில இடங்களில் முதுமக்கள் தாழி எனப்படும் பெரிய 5 அடி உயரமுள்ள பானைகளைக் கொண்டு, அவற்றில் வைத்து மனிதர்களை புதைக்கக்கூடிய பழக்கம் உண்டு.

இவற்றை சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு போன்ற இலக்கியங்களிலும் ‘வரம்பு அறியா உவல் இடு பதுக்கை’, ‘பரல் உயர் பதுக்கை,’ ‘வில் இட வீழ்ந்தொர் பதுக்கை’ என இத்தகைய கல்வட்டம் அமைக்கும் செய்தியை தெரிவிக்கின்றன. இது சங்க கால முதல் பெருங்கற்காலம், புதிய கற்காலத்தினுடைய தொடக்க காலம் வரை இத்தகைய கல்வட்டகள் அமைக்கும் வழக்கம் இருந்ததைக் காட்டுகின்றன.

புதிய கற்காலத்தின் தொடக்க காலத்தில் அமைக்கப்பட்ட கல்வட்டங்களுக்குள், அக்கால மனிதர்கள் பயன்படுத்திய இரும்பு கருவிகள் சிலவும் காணப்படுகின்றன. அக்காலத்தில் எப்படி இவ்வளவு பெரிய கற்களை கொண்டு ஈமக்குழிகளை எழுப்பினார் என்பது, இதுவரை புரியாத புதிராகவே காணப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் அழிந்த பிறகு, அங்கிருந்து மக்கள் தெற்கு நோக்கி வந்த போது, இப்பகுதியில் பரவி இருக்கலாம் என்று சில வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலை நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இவை வானவெளியை ஆராய்வதற்கான ஆய்வுக்கூடங்களாக, அதாவது இரவு நேரத்தில் வெற்று கண்களால் நட்சத்திரங்களையும், பிற கோள்களையும் காண்பதற்கான ஒரு ஆய்வுக்கூடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் மிகப்பெரிய அளவில் காணப்படும் இந்த ஈமக்குழிகளை, அரசாங்கம் நினைவிடமாக அறிவித்து அவற்றை பாதுகாத்தால், வருங்கால சந்ததியினருக்கு, இப்பகுதியின் வரலாறும், தொன்மையும், பண்பாட்டு கலாச்சாரமும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தர்மபுரி மாவட்டத்தில், சமீபத்தில் ஆதனூர் கல்வட்டத்தை நினைவுச்சின்னமாக அறிவித்தது போல, இவற்றையும் நினைவு சின்னமாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தர்மபுரி அருகே அஜ்ஜிப்பட்டியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Ajjipatti ,Dharmapuri ,Dharmapuri district ,Jaruku, Ajjipatti ,Jaruku ,Ajjipatti Wilderness ,Toppur, Dharmapuri District ,Dharmapuri State College of Arts ,Professor of History ,Chandrasekhar ,
× RELATED தம்பதியை கொலை செய்து சடலங்களுடன்...