×

சாலை அகலப்படுத்தும் பணியில் ஒரே நேரத்தில் இருபுறமும் சாலை அமைப்பதால் விபத்து அபாயம்

*அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புவனகிரி : சாலையில் ஒரே நேரத்தில் இருபுறமும் சாலை அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் இருந்து வயலூர், மணலூர், லால்புரம் வழியாக சிதம்பரம் வண்டிகேட் வரை செல்லும் சாலை குறுகலான சாலையாக இருந்தது. இதனால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்து சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இருந்து சிதம்பரம் புறவழிச்சாலை வரை சாலை அகலப்படுத்தப்பட்டது.

இருபுறமும் அகலப்படுத்தப்பட்ட சாலைக்கு நடுவே தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் சிரமமின்றி சென்று வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் எஞ்சிய சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள லால்புரம் – சிலுவைபுரம் பகுதியிலிருந்து கீரப்பாளையம் வரை சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்ற இந்த திட்ட பணிகளை தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்த சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு, சிறு பாலங்கள் கல்வெட்டுகள் உள்ளிட்டவை கட்டப்பட்டது.

பின்னர் இந்த சாலைக்கு நடுவே தற்போது சாலையை பிரிக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கீரப்பாளையத்தில் இருந்து சிதம்பரம் புறவழிச் சாலை வரை பல்வேறு கட்டங்களாக இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. சாதாரணமாக இந்த தடத்தில் சாலை அமைக்கப்படும்போது ஒரு புறம் மட்டும் சாலை அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும்.

மற்றொரு புறம் வாகனங்கள் செல்வதற்கு எளிதாக இருக்கும். ஒரு புறத்தில் சாலை பணிகள் முடிவடைந்த பிறகு, அதில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு, அதன் பிறகு மற்றொரு பக்கத்தில் சாலை அமைக்கப்படும். இப்படித்தான் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் நடந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கீரப்பாளையம் அரசு பள்ளி பகுதியில் இருந்து கடைவீதி வரை உள்ள எஞ்சிய சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேலாக சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

இந்த சாலை அமைக்கப்படும்போது முந்தைய நடைமுறையை பின்பற்றவில்லை. அதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதாவது, ஒருபுறம் சாலையை முழுவதுமாக அமைத்து முடித்து விட்டு, அதில் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதன் பிறகுதான் அதற்கு அடுத்த புறத்தில் உள்ள சாலை பணிகளை துவங்கி இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளில் இருபுறமும் ஒரே நேரத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சிறு, சிறு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை மேடு, பள்ளமாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் உள்ளது. இதனால் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த சாலை பணிகளால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஒரு சில நேரங்களில் சாலைகளில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிகளால் இரு சக்கர வாகனங்களில் பிரேக் பிடிக்காமல் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. ஏற்கனவே கீரப்பாளையம் பகுதியில் முக்கிய தெருக்களுக்கு செல்வதற்கு வசதியாக சாலையின் நடுவே வழி விடாமல் தடுப்பு கட்டை அமைக்கும் முயற்சியும் நடந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழித்தடத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்கேற்ப இல்லாமல் அலட்சியமாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலை பணியின்போது பெரிய விபத்துகள் எதுவும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு பாதுகாப்போடு கூடிய சாலை அமைக்க உத்தரவிட வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை அகலப்படுத்தும் பணியில் ஒரே நேரத்தில் இருபுறமும் சாலை அமைப்பதால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Bhubanagiri ,Chidambaram Vandigate ,Keerappalayam ,Chidambaram ,Vayalur ,Manalur ,Lalpuram ,Dinakaran ,
× RELATED பு.முட்லூர் புறவழிச்சாலையில் பாலம்...