*உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
கரூர் : கரூர் அருகே வாலிபர் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அவரது உடலை நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
கரூர் தெற்கு காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஜீவா (19). 8ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள பைான்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ம்தேதி வீட்டில் இருந்த ஜீவா திடீர் காணவில்லை. அவரது செல்போன் சுச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து பெற்றோர், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஜீவாவின் தாய் சுந்தரவள்ளி, தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார், மாயமான ஜீவா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் உபயோகப்படுத்திய அவரது செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்ட இடத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்ட செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். பின்னர் போலீசார், சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த 2021ம் ஆண்டு வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த மோகன்ராஜை, அவரது நண்பரான தர்மா (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. உயிரிழந்த மோகன்ராஜின் உயிர் நண்பரான சசிகுமார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன் பகையில் இருந்து வந்துள்ளார். ஜீவாவும், சசிகுமார் உள்ளிட்ட நண்பர்கள் வழக்கமாக தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம் உள்ள சீமைகருவேல மரங்கள் படர்ந்த பயன்பாட்டில் இல்லாத நிறுவன வளாகத்தில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சசிக்குமார் புகைப்படத்துடன், அவரது தலை சிதைக்கப்படும் என பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு மது அருந்த வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து ஜீவாவும், தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு மது அருந்த சென்றுள்ளார். ஜீவாவை அங்கே விட்டு விட்டு உடன் வந்த நண்பர்கள் வேலை இருப்பதாக கூறி விட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து மதுபோதையில் இருந்த ஜீவாவை, சசிகுமார் பழைய பகையை மனதில் வைத்து கொண்டு முதலில் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். தொடந்து ஆத்திரம் அடங்காமல் தனது நண்பர்களை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வரச்சொல்லி தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டி அதனை அங்கே முட்புதருக்குள் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைதான சசிக்குமாரிடம், கொலையான மோகன்ராஜ் நான் இறந்ததற்கு காரணமானவர்களை நீ இன்னும் ஒண்ணும் செய்யாமல் இருக்குறியே என தினமும் கனவில் வந்து கேட்டதின் பேரில் முதலாவதாக ஜீவாவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.இதையடுத்து போலீசார் சசிக்குமாரை, சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சம்பவம் நடந்த இடத்தில் குழி தோண்டப்பட்டு ஜீவா உடல் வெளியே கொண்டு வரப்பெற்றது. மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5 மணியளவில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post கரூர் அருகே நெஞ்சை பதற வைத்த சம்பவம் வாலிபர் துண்டு துண்டாக வெட்டி புதைப்பு appeared first on Dinakaran.