இந்தியாவில் டெலிகாம் என்னும் தொலை தொடர்புத்துறையில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகியவை உள்ளன. இவற்றில் தனியார் நிறுவனங்கள், 4ஜி, 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், நகரப்பகுதிகளுக்கு 4ஜி சேவையை வழங்குகிறது. ஊரக பகுதிகளுக்கு 4ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கையில், தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக டவர்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதத்தில் தனியார் செல்போன் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. இதனால், அச்சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக ₹153க்கு 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹365க்கு 60 நாட்களுக்கு தினமும் 2 ஜிபியும், ₹429க்கு 81 நாட்களுக்கு தினமும் 1 ஜிபியும், ₹485க்கு 90 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹666க்கு 134 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹997க்கு 180 நாட்களுக்கு தினமும் 3 ஜிபியும் என குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் கட்டணம் உயர்ந்த நிலையில், பிஎஸ்என்எல் குறைத்திருப்பதால், நகர பகுதியில் வசிக்கும் மக்கள், பிஎஸ்என்எல் சேவைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நடப்பு மாதத்தில், 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வந்துள்ளனர். மொபைல் எண்ணை மாற்றாமல், அதே நம்பரில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு மாறியுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில் கடந்த 28 நாளில் 2 லட்சம் பேர் மாறியிருக்கிறார்கள். தற்போது, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என முக்கிய நகரங்களில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. பிஎஸ்என்எல் மொபைல் சேவைக்கு மாறி வருவதற்காக விண்ணப்பிக்கின்றனர். மேலும், புதிய சிம்கார்டுகளையும் பெற்று வருகின்றனர். இதில், சென்னை, சேலம், கோவை நகரங்களில் தலா 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர், மொபைல் எண்ணை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு மாறி வந்துள்ளனர்.
இதுபற்றி பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் 4ஜி சேவையில், குறைந்த கட்டணத்தில் அதிக நாட்கள் ரீசார்ஜ் மற்றும் அதிக டேட்டா பயன்படுத்தும் வகையில் பல திட்டங்கள் உள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்குகளை விட்டு விட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். கடந்த 28 நாளில் நாடு முழுவதும் 30 லட்சம் பேர், பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தது 10 ஆயிரம் பேர் மாறியிருக்கிறார்கள். இது வரும் மாதங்களில் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதே போல், ஊரக பகுதிகளுக்கும் 4ஜி சேவை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.
1 லட்சம் டவர் மூலம் 4ஜி சேவை
டெல்லியில் பிஎஸ்என்எல் சேர்மனாக, சமீபத்தில் பொறுப்புக்கு வந்த ராபர்ட்ஜெரால்டு ரவி, ஒவ்வொரு பிஎஸ்என்எல் வட்டங்களுக்கும் சென்று, 4ஜி, 5ஜி சேவை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரம், தமிழ்நாடு வட்ட ஆலோசனைக்காக சென்னை வந்தார். அப்போது, ‘நாடு முழுவதும் தற்போது உள்ள 70 ஆயிரம் டவர்கள் மட்டுமின்றி, புதிதாக 35 ஆயிரம் டவர்கள் அமைத்து, 1.05 லட்சம் டவர்களின் மூலம் 4ஜி சேவையை வழங்க வேண்டும். அதற்கான பணியை முடுக்கி விட வேண்டும். ஒவ்வொரு தொலை தொடர்பு மாவட்டத்திற்கும், 4ஜி டவர் ரிசீவர் உள்ளிட்ட கருவிகள் தொடர்ந்து அனுப்பப்படும். அதனை முறையாக ஏரியா வாரியாக டவர்களில் பொருத்தி, ஊரக பகுதிக்கும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைத்திட செய்ய வேண்டும்,’ என அவர் அறிவுறுத்திச் சென்றதாக அதிகாரிகள் ெதரிவித்தனர்.
The post தனியார் செல் நிறுவனங்களில் கட்டண உயர்வு; பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிய 30 லட்சம் வாடிக்கையாளர்கள் appeared first on Dinakaran.