×

ஒன்றிய அரசின் நிதி வேண்டுமானால் வெள்ள சமவெளி மண்டல சட்டத்தை ஏற்க வேண்டும்: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் சமவெளிப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தவிர்க்க வெள்ள சமவெளி மண்டல சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் கான்கிரீட் கட்டமைப்புகளை அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்துகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய மண்டலங்களை வரையறுத்து, அதற்கேற்ப திட்டங்களை உருவாக்க மாநில அரசுகளை ஊக்குவிக்கிறது. ஆனால் பலமுறை நினைவூட்டிய நிலையிலும் இதுவரை 4 மாநிலங்கள் மட்டுமே வெள்ள சமவெளி மண்டல சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.

இது குறித்து ஒன்றிய ஜல் சக்தி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘இதுவரை மாநில அரசுகளுக்கு பலமுறை நினைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே இச்சட்டத்தை இயற்றி உள்ளன. பீகார், உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்கள் சட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து தெரிவித்துள்ளன. மற்ற மாநிலங்கள் இன்னும் சட்டத்தை இயற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெள்ளம் வடியும் சமவெளி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவற்றை அகற்றுவதில் உள்ள சிக்கல், ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மாற்று இடம் வழங்குவது போன்றவை மாநிலங்களின் பொதுவான பிரச்னையாக உள்ளன. ஆனாலும், வெள்ள தடுப்பு பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி வேண்டுமென்றால், வெள்ள சமவெளி மண்டல சட்டத்திற்கு மாநில அரசுகள் இணங்க வேண்டுமென்ற கட்டாயத்தை கொண்டு வர ஜல் சக்தி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது’’ என்றனர்.

The post ஒன்றிய அரசின் நிதி வேண்டுமானால் வெள்ள சமவெளி மண்டல சட்டத்தை ஏற்க வேண்டும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : EU STATE ,New Delhi ,EU ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுத் துறை உயர் அதிகாரிகள்...