×

ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு பேரன் வேண்டுகோள்

கொல்கத்தா: நேதாஜியின் அஸ்தியை ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் ஜப்பானில் இருந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நேதாஜி, 2ம் உலகப் போரின்போது இந்தியாவில் இருந்து வௌியேறி, ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். அங்கு பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிரக தீவிரமாக போராடிய ஜெர்மனி படைகளுடன் இணைந்து இந்திய விடுதலைக்கான போராட்டங்களை தொடர்ந்தார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற விமானம் தைவானில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் நேதாஜி உயிரிழந்து விட்டதாக கருதப்படுகிறது. ஆனால் நேதாஜியின் மரணம் குறித்த உண்மை விவரங்கள் மர்மமாகவே நீடிக்கிறது. நேதாஜியின் அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மகள் அனிதா போஸ் உள்பட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேதாஜியின் பேரன் தற்போது மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேதாஜியின் பேரனும், மேற்குவங்க பாஜ முன்னாள் துணைத்தலைவருமான சந்திர குமார் போஸ் தன் ட்விட்டர் பதிவில், “தேசிய மற்றும் சர்வதேச அளவில் அனைத்து விசாரணைகளும் ெவளியான பிறகு, சுபாஷ் சந்திர போஸ் தைவானில் விமான விபத்தில் 1945 ஆகஸ்ட் 18ல் இறந்தது உறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேதாஜியின் மரணம் தொடர்பான ஆவணங்களை வௌியிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.

வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் ஜப்பானில் இருந்து நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பற்றிய தவறான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தி உள்ளார்.

The post ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு பேரன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Netaji ,India ,Union Govt. ,Kolkata ,Japan ,British ,Indian National Army ,Union Government ,Dinakaran ,
× RELATED சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல்...