சென்னை: ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியர்கள் சிலர், பல கல்லூரிகளில் பணியாற்றியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் 189 பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 800ஐ தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க அரசு சார்பிலும், பல்கலைக்கழகம் சார்பிலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பிலும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வரும் வாரத்தில் இந்த குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பேராசிரியர்கள் முறைகேட்டோடு தொடர்புடைய கல்லூரிகளிடமும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனியார் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்ததை கண்டுபிடித்தோம். அந்த தனியார் அமைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார். பேராசிரியர்கள், கல்லூரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஒரு வாரத்தில் பரிந்துரைக்க இருக்கிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தன்னுடைய ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில், ‘நான் துணைவேந்தராக இருந்த காலத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதோடு, சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சதவீதமும் குறைக்கப்பட்டது. இது சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் பல்கலைக்கழகத்தின் உத்தரவை உறுதி செய்தது’ என பதிவிட்டுள்ளார்.
* போலி மின்னஞ்சல் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மோசடியில் ஈடுபடுபவர்களில் சிலர் என்னிடம் இருந்து வந்தது போல வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புகிறார்கள். மேலும் என்னுடைய பெயர், புகைப்படம், போலி மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற மின்னஞ்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பதில் அளிக்காமல் அவர்களை பற்றி புகார் அளிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
The post முறைகேடாக கல்லூரிகளில் பணிபுரிந்த பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் appeared first on Dinakaran.