சென்னை: வடபழனியில் நண்பர் வீட்டிற்கு படிக்க வந்த போது, வீடியோ காலில் தோழியுடன் பேசிய போது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து 8ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தான். இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி தங்கவேல் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் பிரஜன் (13). சாலிகிராமத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தான். தன்னுடன் படிக்கும் வடபழனி அழகிரி நகர் 1வது தெருவை சேர்ந்த நவீன் என்பவர் வீட்டிற்கு இருவரும் சேர்ந்து படிப்பதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு பிரஜன் வந்தான்.
மதியம் 2.30 மணிக்கு நவீன் வீட்டின் 4வது மாடியில் பிரஜன் தனது செல்போனில் வீடியோ கால் மூலம் உடன் படிக்கும் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் டேங்க் மீது ஏறி நின்று பேசியுள்ளார். அப்போது காற்று சற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பிரஜன் நிலை தடுமாறி தண்ணீர் டேங்க்கில் இருந்து கீழே விழுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத நவீன் தாய் தீபா அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே உயிருக்கு போராடிய பிரஜனை மீட்டு ஆட்டோ ஒன்றில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பிரஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரஜனின் பெற்றோரிடம், நவீன் தாய் தீபா தெரிவித்தார். அதை கேட்டு பிரஜன் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து அலறி துடித்த காட்சி அங்கு இருந்தவர்களை கண்ணீர் வரவழைத்தது. பின்னர் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் பிரஜனின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வடபழனி உதவி ஆய்வாளர் வாசுகி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது பிரஜன் தனது தோழியிடம், வீடியோ கால் மூலம் ‘நான் எவ்வளவு உயரத்தில் நின்று இருக்கிறேன்’ என வீடியோ கால் மூலம் காட்டியுள்ளார். அப்போது தான் அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தோழி, உயிரிழந்த பிரஜன் பெற்றோரிடம் கூறி அழுததாக விசாரணையின் மூலம் உறுதியானது. இருந்தாலும் போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ‘எவ்வளவு உயரத்தில் நின்று பேசுகிறேன் பார்’ வீடியோகாலில் தோழியிடம் பேசிய மாணவன் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலி: வடபழனியில் நண்பர் வீட்டில் ஏற்பட்ட விபரீதம் appeared first on Dinakaran.