×

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம்; கமலா ஹாரிஸ் பதவிக்கு வந்தால் குற்றம், குழப்பம், மரணம் தருவார்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ள நிலையில், முக்கியமான இறுதி 100 நாள் கட்டத்தை பிரசாரம் எட்டி உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியில் அதிபர் ஜோ பைடன் விலகிய பிறகு அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்திற்குப் பிறகு கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகுகிறது. முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள் கமலா ஹாரிசுக்கு முழு ஆதரவு அளிக்கின்றனர். இதனால், குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளுடன் ஆவேச பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மினசோட்டாவில் நேற்று முன்தினம் நடந்த பிரசார பேரணியில் டிரம்ப் பேசியதாவது:
அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னணியில் பெரும் சதி நடந்துள்ளது. அவர் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டவர்களால் மிரட்டப்பட்டுள்ளார். முன்னாள் அதிபர் கென்னடியின் படுகொலைக்குப் பிறகு ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க அமெரிக்க அரசியலமைப்பின் 25வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உடல் ரீதியாக இயலாமை இருந்தால் அதிபரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு வழங்கப்படுகிறது. இந்த 25வது திருத்தத்தை வைத்துதான் பைடனை மிரட்டி, அதிபர் போட்டியிலிருந்து ஓடச் செய்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் தீவிர இடது-தாராளவாத கொள்கை கொண்டவர். அவர் அதிபரானால் அமெரிக்காவுக்கு குற்றம், குழப்பம், வன்முறை, மரணத்தைத்தான் கொடுப்பார். காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள தீவிரவாதிகளை அகதிகளாக கொண்டு வந்து நம் நாட்டை நிரப்புவார். சான் பிரான்சிஸ்கோவில் மாவட்ட அட்டர்னியாக இருந்த போது, அம்மாகாணத்தையே அழித்தவர்தான் கமலா ஹாரிஸ். அதே போல நாட்டையும் அழிப்பார். ‘ சான்பிரான்சிஸ்கோவை கம்யூனிஸ்ட் மாகாணமாக மாற்றியது போல அமெரிக்காவை மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதிபராக எந்த தகுதியும் இல்லாதவர் கமலா. அவர் மிக மோசமானவர். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஹாரிசின் செய்தித் தொடர்பாளர் சரபினா சிட்டிகா, ‘‘கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவின் கதை முடிந்தது என்கிறார் டிரம்ப். அதுவே தான் வெற்றி பெற்றால் ஜனநாயகம் முடிவுக்கு வரும், அடுத்து ஓட்டு போட வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார். எனவே நமது சுதந்திரத்தை பறிக்கவும், அமெரிக்காவை பின்னோக்கி அழைத்துச் செல்வதையும் டிரம்ப் இலக்காக கொண்டிருப்பது தெளிவாக புரிகிறது’’ என்றார்.

மக்கள் சக்தியால் வெற்றி பெறுவேன்
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்ட பிறகு தனது முதல் பிரசாரத்தை மேற்கொண்ட கமலா ஹாரிஸ், ‘‘அதிபர் தேர்தலில் நாங்கள் பின்தங்கியிருக்கிறோம். ஆனால் மக்கள் சக்தியால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னைப் பற்றி பல பொய்களை டிரம்ப் பரப்பி வருகிறார். அதனால்தான் என்னுடன் நேரடி விவாதம் மேற்கொள்ள அவர் பயப்படுகிறார்’’ என்றார்.

ஒரே வாரத்தில் கமலாவுக்கு குவிந்த ₹1,600 கோடி நிதி
அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து ஒரே வாரத்தில் அவர் தனது பிரசாரம் மூலம் ரூ.1,660 கோடி கட்சி நிதி திரட்டி உள்ளார். இதில், நிதி அளித்தவர்களில் 66 சதவீதம் பேர் முதல் முறை நன்கொடையாளர்கள். மேலும், ஹாரிஸ் பிரசார அணியில் 1.70 லட்சம் புதிய தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இதுதான் கமலா ஹாரிஸ் மீதான டிரம்ப்பின் கடுமையான கோபத்திற்கு காரணம்.

The post அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம்; கமலா ஹாரிஸ் பதவிக்கு வந்தால் குற்றம், குழப்பம், மரணம் தருவார்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : US Presidential Election ,Kamala Harris ,Trump ,Washington ,President Joe Biden ,Democratic Party ,US ,Dinakaran ,
× RELATED கமலா ஹாரிஸ் பதவி ஏற்பில் அவரது தந்தை...