* விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடந்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா மற்றும் கூட்டுறவு, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியதாவது, கடந்த ஜனவரி முதல் பருவம் தவறி பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. இந்த ஆண்டு சிறுதானியம் ஆண்டாக கடைபிடிப்பதால் மாவட்டத்தில் சிறுதானிய விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் பழனி, ஆலங்கட்டி மழையினால் பயிர் சேதமடைந்த 61 விவசாயிகள் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 65 விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையினால் 13 வட்டாரங்களில் கணக்கெடுப்பு நடத்தி 650 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் காரணமாக இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யாமல் உள்ளன. அதேபோல், பட்டா மாற்றம் தொடர்பாக 6 ஆயிரம் மனுக்கள் கிடப்பில் உள்ளன. இதனால் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் பழனி, விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ரேஷன் கார்டு, பட்டா மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம். பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக கூறினார். தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், மழைகாலம் துவங்க உள்ளதால் உரம், விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறுவந்தாட்டில் சிவன் கோயிலில் 7 சிலைகள் திருடுபோய் பலஆண்டுகளான நிலையில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் கலுங்குகள், மதகுகளை மழைகாலத்திற்குள் சீரமைக்கவேண்டும்.
மீன் குத்தகை எடுப்பவர்கள் ஏரிகளை சேதப்படுத்திவிட்டு செல்கின்றனர். அவர்களே பராமரிக்க உத்தரவிட வேண்டும். ஊரகவளர்ச்சித்துறை ஏரிகளில் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அனுமதி கொடுத்தது யார்?. 750 ஏரிகளில் முட்செடிகள் அகற்றப்படாமல் புதர்மண்டி கிடக்கிடப்பதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர், ஏரி வாய்க்கால்களில் சாலை அமைப்பதற்கு அனுமதி கிடையாது. பாதையாகவும் பயன்படுத்த முடியாது. அப்படியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான ஏரிகளில் முட்செடிகள் வெட்டும் பணி துவங்கி நடைபெற்று கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைத்துறை செயலிழந்து கிடக்கிறது. மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருவது கிடையாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நலத்திட்ட உதவி பயனாளிகள் விவரம் கேட்டால் காவல்நிலையத்தில் புகார் அளித்து மிரட்டுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்குமேல் பணியாற்றுபவர்களை இந்த
துறையில் இடமாற்றம் செய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, விஷக்கடி மருந்துகள் தட்டுப்பாடின்றி இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
அதேபோல், மழைகாலம் முடியும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடைவிதித்து கண்காணிக்க வேண்டும். விழுப்புரம் நகரில் பயோகம்போஸ் உரம் விவசாயிகளுக்கு வழங்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளிமாவட்டத்திலிருந்து வந்த விவசாயிகள் டன் ரூ.1000க்கு வாங்கி செல்கின்றனர். நாங்கள் உள்ளூரில் ஒரு லோடு அதே விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி குறைவுக்கு வேளாண்மைதுறை அதிகாரிகள்தான் காரணம். அதிக மகசூல் தரும் கரும்பு விதைகளை வழங்கவில்லை. என்றனர்.
கண்டமங்கலம் வட்டாரத்தில் மனைகளாக மாறும் விவசாய நிலம்
கூட்டத்தில் விவசாயி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் சமீப நாட்களாக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. குறிப்பாக கண்டமங்கலம் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் வீட்டு மனைகளாக பிளாட்போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய சாகுபடி பரப்பு குறைந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த வட்டாரத்தில் சில மாதங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் மனைகளாக போடப்பட்டு வருகிறது. இதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்படுகிறதா? இந்த ஒரு வட்டாரத்திற்கு மட்டும் எப்படி இவ்வளவு மனைகள் கிடைக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த வட்டாரத்தில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக போடப்பட்டுள்ளதை அதிகாரிகளை கொண்டு குழு நியமித்து ஆய்வு செய்திட வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.
The post 6 ஆயிரம் மனுக்கள் குவிந்து கிடக்கிறது பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடத்த வேண்டும் appeared first on Dinakaran.