- ஆதி அமாவாசை திருவிழா
- சரிமுத்து அய்யனார் கோயில்
- காரையரு
- Vikepuram
- ஆடி அமவாசை விழா
- ஆடி அமவாசி திருவிழா
- காரையாரு சோரிமுத்து அய்யனார் கோயில்
* பக்தர்கள் தங்குவதற்கு குடில்கள் அமைப்பு
* 97 நிரந்தர கழிப்பறை, 130 தற்காலிக கழிப்பறை வசதி
விகேபுரம் : காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்குவதற்கு குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 97 நிரந்தர கழிப்பறை, 130 தற்காலிக கழிப்பறை அமைக்கப்படுகிறது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இவர்கள், தங்களது குடும்பத்துடன் வனப்பகுதியில் குடில் அமைத்து தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபாடு செய்வர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி கடந்த 22ம் தேதி கால்நாட்டு வைபவம் நடந்தது.
இந்நிலையில் வருகிற 3ம் தேதி சொரிமுத்து அய்யனாருக்கு அபிஷேக, தீபாராதனையுடன் திருவிழா தொடங்குகிறது. கோயில் வளாகத்தில் உள்ள மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், பட்டவராயர், பேச்சியம்மன், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசையை முன்னிட்டு 4ம் தேதி அதிகாலையிலேயே பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். மதியம் 1 மணியளவில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து மாலையில் மேலவாசல் பகுதியில் தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தார் சன்னதியில் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்குவர்.
இரவில் பட்டவராயர் சன்னதியில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ெதாடர்ந்து மறு நாள் 5ம் தேதியன்று அதே இடத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். 6ம் தேதி சங்கிலி பூதத்தார் சந்நிதி, கும்பமுனி, பேச்சியம்மனுக்கு சிறப்பு படையலிடும் நிகழ்ச்சியும், பூக்குழி இறங்குதலும் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்குவதற்காக குடில் அமைக்கும் பணி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை நேற்று அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், கோயில் நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அயன் சிங்கம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் சுடலைஅரசன் உடன் இருந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி முருகன் கூறுகையில், ‘இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
குடில் தேவைப்படும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் 97 நிரந்தர கழிப்பறைகளும், 130 தற்காலிக கழிப்பறைகளும், குடிநீர் வசதிக்காக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்குகளும், அதேபோன்று கழிப்பறை வசதிக்காக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட உள்ளன.
வருகிற 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை கோயிலை சுற்றிய பகுதிகளில் 300 குழல் விளக்குகளும், 20 முதல் 30 போகஸ் விளக்குகளும் கட்டப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஆற்றின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும். விகேபுரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்படும், தூய்மை பணியாளர்களும் களப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் நிர்வாகம் சார்பில் 80 தூய்மை பணியாளர்கள் இரண்டு ஷிப்டுகளாக தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர்’ என்றார்.
கோயில் சாலை சீரமைப்பு
காரையாறு மெயின்ரோட்டில் இருந்து கோயிலுக்கு செல்லும் சுமார் 1 கி.மீ சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் கோயிலுக்கு தங்களது பைக், கார், வேனில் வரும் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர். 1 கி.மீ தூர சாலையை கடக்கவே 10 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. அதுவும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, பள்ளம், மேடாக காட்சியளிக்கும் இந்த சாலையால் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 17ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டது. இதைதொடர்ந்து மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் சாலையில் பழுதடைந்த பகுதிகள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
The post காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.