×

“வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

சென்னை : ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.அதன்படி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா? என ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

அதே போல், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.தாம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.இதனிடையே தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை அள்ளிக் கொடுத்துள்ளார்கள் என்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி, வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என்றும் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post “வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : EU ,Union ,Chennai ,Dimuka ,Tamil Nadu ,EU government ,BJP government ,Dinakaran ,
× RELATED மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி...