- சத்யமங்கலம்-
- மைசூர் சாலை
- சத்தியமங்கலம்
- சத்யமங்கலம்-
- மைசூர் தேசிய நெடுஞ்சாலை
- கொம்புபாளையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- தின மலர்
*வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோம்புபள்ளம் பகுதியில் ரூ.5.98 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை விளங்குகிறது. இரு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் இச்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மைசூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால், குண்டல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இச்சாலை இணைக்கிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் விளையும் தக்காளி,வெங்காயம்,முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் பாலக்காடு,திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநிலத்தில் உள்ள நகரங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதேபோல் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இச்சாலை வழியாக கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர்,மைசூர்,கொள்ளேகால் ஆகிய நகரங்களுக்கும், கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு பஸ்களும் இயக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து இச்சாலையில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சாலை விரிவாக்க பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பவானி ஆற்றின் குறுக்கே புதியதாக ஆற்று பாலம் கட்டப்பட்டு கடந்து சில மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த நிலையில் சத்தியமங்கலம் நகர் பகுதி அருகே கோம்புபள்ளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலத்தின் மீது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் விபத்துக்களை தவிர்க்கவும், வாகன போக்குவரத்தை நெரிசலை குறைக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள பழைய பாலத்தின் அருகே புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பினர்.
இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய பாலம் கட்ட ரூ.5.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை அடுத்து மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் டெண்டர் விடப்பட்டு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தூண்கள் அமைக்கப்பட்டு பாலத்தின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியின் தற்போது நிறைவடைந்துள்ளது.
பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் மற்றும் பாலத்தின் இருபுறமும் சாலை விரிவாக்க பணிகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. புதிய பாலம் கட்ட 18 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டிருந்த நிலையில் ஆறு மாத காலத்திலேயே பாலம் கட்டுமான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இரண்டு ஒரு மாதங்களில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று வாகன பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது. சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் கட்டுதல் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோம்புபள்ளம் பகுதியில் ஏற்கனவே உள்ள பழைய பாலத்திற்கு அருகில் புதிதாக பாலம் கட்டுமான பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடைந்து வாகன போக்குவரத்திற்கு திறந்து விடப்பட உள்ளதால் எங்களைப் போன்ற வாகன ஓட்டிகள் எளிதாக வாகனங்களை இயக்க ஏதுவாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சத்தியமங்கலம் – மைசூர் சாலையில் ரூ.5.98 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி 75 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.