×

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

சோழவந்தான், ஜூலை 27: சோழவந்தான் அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊராட்சி சார்பில் இங்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், சுமார் ஒரு வருடமாக நடந்து வந்தது.

தற்போது குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து, சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த காலனி பகுதிக்கான குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. இதனை அதிகாரிகள் சீரமைக்காததால், ஒரு வாரமாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று சோழவந்தான் – கரட்டுப்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, நாச் குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாறன், சோழவந்தான் எஸ்.ஐ சேகர் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் குறைகளை சரி செய்து குடிநீர் விநியோகிக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Cholavanthan ,Cholawanthan ,Nachikulam Colony ,Panchayat ,Cholavantan ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் ரயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்து: வேகத்தடை அமைக்க கோரிக்கை