பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பதியப்பட்ட போக்சோ வழக்கில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெங்களூருவை சேர்ந்த மமதா சிங் என்ற பெண் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி எடியூரப்பா மீது தனது 17 வயது மைனர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை மாநில போலீஸ் டிஜிபி அலோக் மோகன் சிஐடி வசம் ஒப்படைத்தார். எனவே சிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூன் 17ம் தேதி எடியூரப்பாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய சிஐடி போலீசார், ஜூன் 27ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரியும், முன் ஜாமீன் கேட்டும் எடியூரப்பா தரப்பில் இரு வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், ஜூலை 15ம் தேதியன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 26ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அதுவரை எடியூரப்பாவை கைது செய்யக்கூடாது என்றும், அவர் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர் மீது விசாரணை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடியூரப்பா மீதான எப்.ஐ.ஆருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது.
The post போக்சோ வழக்கில் எடியூரப்பாவிடம் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.